அரியலூர் சோழ பாசன திட்டத்தை நிறைவேற்றக் கோரி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., 2 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் இன்று (அக்.30) பேசுகையில், “ஒவ்வொரு வீடு வீடாக சென்று, ஒவ்வொருவரையும் பார்த்து நோட்டீஸ் கொடுக்கிறேன்.
நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும். இப்போது கேட்பார்கள், எந்த நோக்கத்திற்காக ஒன்று சேர வேண்டும் என்று? அந்தக் காலத்தில் நமது முன்னோடிகள், முன்னோர்கள், சோழர்கள் பெரிய சொத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
அந்தச் சொத்து என்னவென்றால் ஏரிகள், குளங்கள். இது அந்தக் காலத்தில் மிக செழிப்பான மாவட்டமாக இருந்தது. தற்போது கடும் வறட்சி. குடிக்கக் கூட தண்ணீர் இல்லை.
தற்போது நம் சொந்தங்கள் வேலைக்காக சென்னை, திருச்சி, பெங்களூரு, கேரளம் என செல்கிறார்கள். இதை போக்க நம்மிடம் ஒரு திட்டம் உள்ளது.
அது அரியலூர் சோழ பாசன திட்டம். இது புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே சோழர் காலத்தில், சோழ மன்னர்கள் நடைமுறைப்படுத்திய திட்டம்.
இந்த மாவட்டத்தில் பெரிய பெரிய ஏரிகள் உள்ளன. கொள்ளிடத்துக்கு வடக்கே அரியலூரும், தெற்கே தஞ்சாவூரும் உள்ளது. இங்கே இயற்கையாக கால்வாய் உள்ளது.
ஆனால் வடக்கில் கால்வாய் இல்லை. இதனால்தான் இங்கு பெரிய பெரிய ஏரிகள் வெட்டப்பட்டன. இது ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நடந்தது. இது 100 ஆண்டுக்கு முன் வரை நல்லா இருந்தது.
அன்று 1500 ஏக்கர் ஆக இருந்த ஏரி இன்று 500 ஏக்கராக இருந்தது. சில ஆறுகளையும் காணவில்லை. இதை மீட்டெடுக்க வேண்டும். இதற்கான வரைபடங்கள் உள்ளன.
இது தொடர்பாக அரசுக்கு அளிப்போம். இதற்கு ரூ.2100 கோடி நிதி ஒதுக்க வேண்டும். இதனை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தர வேண்டும். இது காலத்தின் கட்டாயம், இது அவசியம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil