/indian-express-tamil/media/media_files/2025/06/10/6XPvWRYvoulOMwVyAdBG.jpg)
இதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறைக்குத் திராவிட மாடல் அரசு மூடுவிழா நடத்தியுள்ளது என்றும், இது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் மேலாளர் நிலை வரையிலான பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் மனிதவள நிறுவனங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறைக்குத் திராவிட மாடல் அரசு மூடுவிழா நடத்தியுள்ளது என்றும், இது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர்கள் வரையிலான பணியிடங்களை குத்தகை முறையில் வழங்கும் உரிமை, தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நடைமுறையின்படி, அரசுத் துறைகளுக்குத் தேவையான பணியாளர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனமே பணியாளர்களை அனுப்பி வைக்கும். இதற்கான ஊதிய விவரங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்:
கடைநிலைப் பணியாளர்கள் (அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர்): மாதம் ரூ.13,000.
நகல் எந்திரம் இயக்குபவர்: ரூ.15,000.
தட்டச்சர், இளநிலை உதவியாளர்: ரூ.20,000.
ஓட்டுனர், உதவியாளர்: ரூ.25,000.
அலுவலக கண்காணிப்பாளர்: ரூ.30,000.
அலுவலக மேலாளர் மற்றும் அதற்கு இணையான பணிகள்: அதிகபட்சமாக ரூ.40,000.
மேலும், பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் நிறுவனத்திற்கு 8.4% சேவைக் கட்டணத்தை 18% ஜி.எஸ்.டியுடன் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த புதிய முறைப்படி கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை இந்த நிறுவனம் மூலம் நியமித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சமூகநீதிக்கு எதிரான, மிகவும் ஆபத்தான போக்காகும்” என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான தேர்வு முறை: வழக்கமாகப் போட்டித் தேர்வு அல்லது நேர்காணல் நடத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதன் மூலம்தான் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் வேலைவாய்ப்பு பெற்று முன்னேற முடியும்.
ஆனால், ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும்போது இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் பின்னுக்குத் தள்ளப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், 'சி' பிரிவு பணிகளிலும் குத்தகை நியமனங்களைச் செய்வது குறித்துப் பரிந்துரைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. பா.ம.க.வின் கடும் எதிர்ப்பால் அந்தக் குழுவின் அரசாணை 115 நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தகைய நிலையில், தற்போது மேலாளர் உள்ளிட்ட 'சி' பிரிவு பணிகளையும் குத்தகை முறையில் நிரப்புவதற்கான முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று அரசு விளக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை முறைப்படி நிரப்பாமல், கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்பி வருவதையும் அவர் விமர்சித்துள்ளார். "புதிதாக நியமிக்கப்படவுள்ள 881 கவுரவ விரிவுரையாளர்களையும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக 9,000-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரப்பப்படவில்லை" என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் குத்தகை முறையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நியமனங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
சமூகநீதிப் போராட்டங்களுக்குப் பிறகு வென்றெடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மூடுவிழா நடத்துவதை மன்னிக்க முடியாது என்று கூறியுள்ள அன்புமணி, "சமூகநீதி என்றால் என்ன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியாது. அவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் என்பதுதான் தமிழகத்தில் இப்போது நடக்கும் சமூகநீதி படுகொலைகளுக்குக் காரணம்" என்று விமர்சித்தார்.
இறுதியாக, "குத்தகை, தற்காலிக மற்றும் ஒப்பந்த நியமனங்கள் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா நடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீதிக்கட்சியின் வழிவந்தவர் என்றும், பெரியாரின் பேரன் என்றும் கூறிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும்" என்று கூறி, இந்த தி.மு.க. அரசைச் சமூகநீதியே சபிக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.