க.சண்முகவடிவேல்
Anbumani Ramadoss | Thangar Bachan: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்த செல்வராஜ் என்பர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தி.மு.க அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 9, 2024
சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின்… pic.twitter.com/1kIvtcoY3K
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.