/tamil-ie/media/media_files/uploads/2023/07/Anbumani-Ramadoss.jpg)
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளுமே கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பியிருப்பதால், மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வாய்ப்பில்லை” என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் 35 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் ஒரு ஆசிரியர்கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கல்லூரிகள் திறப்பு, ஆசிரியர் நியமனத்தில் அலட்சியம்:
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ஏற்கனவே தலா 10 கல்லூரிகள் வீதம் இரு கட்டங்களாக 20 கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டன. அண்மையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் திறந்து வைத்ததுடன், மேலும் 4 கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இவற்றையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 179 ஆக உயரும்.
கல்லூரிகள் அதிகரிப்பு, கட்டமைப்பு குறைவு:
"தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஓர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம். அந்த இலக்கை நோக்கி புதிய கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுவது சரியானதே. ஆனால், கல்லூரிகளை மட்டும் திறந்துவிட்டு, அவற்றுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட எந்தக் கட்டமைப்பையும் ஏற்படுத்தாதது ஏமாற்று வேலையாகும்," என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
420 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக:
புதிதாக தொடங்கப்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலும் 5 பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, ஒரு பாடப்பிரிவுக்கு 56 மாணவர்கள் வீதம் மொத்தம் 280 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 12 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் 420 புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரே ஒரு புதிய உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட கல்லூரிகளிலும் கூட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் தான் அயல்பணி முறையில் இந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தரமற்ற கல்விக்கு வழிவகுக்கும் பேராசிரியர்கள் பற்றாக்குறை:
புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்காக ஏற்கெனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் அயல்பணியில் அனுப்பப்படுவதால், அந்தக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 9000க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளுமே கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பியிருப்பதால், மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வாய்ப்பில்லை” என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தி.மு.க அரசின் வாக்குறுதி மீறல்:
"அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் 4000 புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாள் முதல் தி.மு.க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதன் பின்னர் ஆயிரக்கணக்கான உதவிப் பேராசிரியர்கள் ஓய்வு பெற்று விட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இவ்வளவுக்குப் பிறகும் புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு முன்வரவில்லை என்றால் அவற்றை யாரும் காப்பாற்ற முடியாது," என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி சீரழிவு:
மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க, சிறந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையைக் கூட செய்யத் தவறிவிட்ட தி.மு.க அரசு, உயர்கல்வியை சீரழித்து வருவதாகவும், இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளை கெடுக்கும் தி.மு.க அரசை, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களே சரியான நேரத்தில் வீழ்த்தி, பாடம் புகட்டுவார்கள் என்றும், இது நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.