போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரூ4000 தானா? அன்புமணி கண்டனம்

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு அகவிலைப்படி உயர்வு வழங்கும் வகையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
buses anbumani 1

ரூ.19,000 வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு ரூ.4,000 மட்டுமே அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஓய்வூதியர்களை ஏமாற்றும் செயலில் அரசு ஈடுபட வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;

தமிழ்நாட்டில் அரசு போகுவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி அதிகபட்சமாக 27 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல என்பது மட்டுமின்றி, இந்த உயர்வையும் தமிழக அரசு தானாக வழங்கவில்லை; உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கொடுத்த அழுத்தத்தாலும், கண்டனத்தாலும் தான் இதை வழங்கி இருக்கிறது. அரசின் இந்நடவடிக்கை போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மனநிறைவை அளிக்கவில்லை.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்திருக்கும். அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் இப்போது வழங்கப்படும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.

Advertisment
Advertisements

ஆனால், தமிழ்நாட்டில் மின்சார வாரியம் உள்ளிட்ட பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எந்தத் தடையுமின்றி வழங்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கூட அதை செயல்படுத்தாத தி.மு.க அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ஆனால், தமிழக அரசின் மேல்முறையீட்டை கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அப்போதாவது தமிழக அரசு மனம் திருந்தி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட தமிழக அரசு இப்போது உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

இதனிடையே, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் சார்பில் தொடரப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அகவிலைப்படி உயர்வு வழங்காததற்காக கண்டனம் தெரிவிக்கப்படுமோ? என்று அஞ்சிய தமிழக அரசு, மாதம் ரூ.15 கோடி அளவுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புக்கொண்டது. அதை சில நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தான் குறைந்த அளவில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் 246 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெற வேண்டிய ஓய்வூதியர்களுக்கு இப்போது 146 சதவீதம் அளவுக்கும், ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைப்படி 53 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு இப்போது 14 சதவீதம் அளவுக்கும் மட்டும் தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்சமாக ரூ.19,000 வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு ரூ.4,000 மட்டுமே அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு முழு அளவு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு அதில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் இந்த சிக்கலை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிவைக்கலாம் என்று தி.மு.க அரசு கருதுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் அது தமிழக ஆட்சியாளர்களுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடும்.

எனவே, சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு அகவிலைப்படி உயர்வு வழங்கும் வகையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதை விடுத்து ஓய்வூதியர்களை ஏமாற்றும் செயல்களில் அரசு ஈடுபட்டால் ஒரு லட்சம் ஓய்வூதியர் குடும்பங்களின் சாபம் தி.மு.க அரசை வீழ்த்தும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: