Advertisment

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து... சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஜெயலலிதா அவர்களால் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என டாக்டர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்

author-image
WebDesk
New Update
Anbumani

பா.ம.க தலைவர் டாக்ட அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டி தொகுதியில் கானை காலனி கிராமத்தில் பிரச்சாரம் செய்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. இந்த இட ஒதுக்கீடு1994-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

அதன் தொடர்ச்சியாக 69 சதவீத இட ஒதுக்கீடை கொடுக்கக் கூடாது என்று 2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பில், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கின்றார்களா? என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், இன்னும் ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள். 

அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு வழக்கு 2012-ம் ஆண்டு தொடரப்பட்டது. தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்தி உள்ளது. ஆனால் 2021-ம் ஆண்டு தினேஷ் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை கொடுத்தார். அந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தது என்னவென்றால், மகாராஷ்டிராவில் மராட்டா இட ஒதுக்கீடு சம்பந்தமாக வழக்கு உள்ளது. அந்த வழக்கு முடிந்த உடன் தமிழகத்தில் உள்ள தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீடு வழக்கை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்கள். 

மகாராஷ்டிராவின் மராட்டா இட ஒதுக்கீடு வழக்கு முடிந்திருக்கிறது. ஜூலை 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடுகிறது. 69 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சனையை நிச்சயமாக உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கையில் எடுப்பார்கள்  என்பதுதான்என்னுடைய  பயம். அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் 69 சதவீத அளவிற்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களா என்ற ஒரு கேள்வியை எழுப்புவார்கள்? அதற்கு தமிழக அரசால் எந்த பதிலும் அளிக்க முடியாது. தமிழகத்தில் இருக்கக்கூடிய 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது 

இது எவ்வளவு பெரிய அநீதி? இதை நான் அக்கிரமாக பார்க்கிறேன், அதாவது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்லியும் தமிழக அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ இவர்கள் இந்த வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு கேட்கிறார்கள் என நினைக்க வேண்டாம்.

இவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், வன்னியர் உள் ஒதுக்கீடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆபத்து இருக்கிறது. சமூக நீதி பேசுகின்ற தி.மு.க-விற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்தினால் தான், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரும். இல்லையேல் அதனை ரத்து செய்வார்கள். 

பலமுறை நாங்கள் எச்சரித்து இருக்கிறோம். மருத்துவர் அய்யாவும் எச்சரித்திருக்கிறார். ஆனால், இவர்கள் இதனை காதில் வாங்குவதாக இல்லை. இவர்களுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியும். ஆனால் யாருக்கும் சமூக நீதி, 69% இட ஒதுக்கீடு குறித்து அக்கறை இல்லை. 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது, எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. 1984-ம் ஆண்டு அம்பா சங்கர் ஆணையம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி, அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 

1984-லேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதன் பிறகு தொடர்ச்சியாக 2008-ம் ஆண்டு இந்தியன் ஸ்டேடஜிக்கல் ஆக்ட் படி பீகார் மாநிலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. பீகார் மாநிலம் நடத்திய கணக்கெடுப்பை பீகார் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. 

அப்போ ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் என்ன அச்சம் இருக்கிறது? நீதிமன்றம் ரத்து செய்வார்கள் என்று? மத்திய அரசுதான் எடுக்கணும்.. மத்திய அரசுதான் எடுக்கணும் என்று ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். 

தமிழக மக்களுக்கும் ஒரு எச்சரிக்கை, இங்கு யாருமே தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, தமிழக அரசுக்கு தமிழக மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால், உறுதியாக 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து ஆகும். இன்றே நான் எச்சரிக்கை கொடுக்கிறேன். 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேல் உச்ச நீதிமன்றத்தில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. என்று வேண்டுமானாலும் ரத்து ஆகும். அப்படி ரத்து ஆகிவிட்டது என்றால், தமிழகத்தில் கலவரம் நடக்கும். பெரிய பிரச்சனை நடக்கும். அதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், தி.மு.க அரசும் தான் காரணமாக இருப்பார்கள். 

அதனால், முன்னெச்சரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள், உச்ச நீதிமன்றத்தில் இவ்வளவு பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இருக்கிறோம் என்று நியாயப்படுத்துங்கள். அப்போதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார்கள்.

இது ஏதோ அரசியலுக்காக, தேர்தலுக்காக, வாக்குக்காக சொல்லவில்லை. தமிழ்நாட்டின் சமூக நிதியை நிலைநாட்ட வேண்டும் என்று சொல்கிறேன். 

50 ஆண்டுகளுக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பும் இட ஒதுக்கீடு கிடைத்தது. சுதந்திரத்திற்கு பின் கொஞ்சம் அதிகமாக இட ஒதுக்கீடு கிடைக்கிறது. அதற்குண்டான வரலாறு உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டால் எந்தெந்த சமுதாயம் பயன்பட்டிருக்கிறது? எந்தெந்த சமுதாயம் பயன்பெறவில்லை என்று தெரிந்து கொள்ள கூட ஸ்டாலின் அவர்களுக்கு ஆசை இல்லையா? அக்கறை இல்லையா? இந்த கணக்கெடுப்பு, நான் சென்சஸ் கேட்கவில்லை. சர்வே எடுத்தால் எந்தெந்த சமுதாயம் பின்தங்கி இருக்கிறது.. எந்தெந்த சமுதாயம் பாதாளத்தில் இருக்கிறது... எந்தெந்த சமுதாயம் பயன்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதனை தமிழக மக்களுக்கு சொல்வது என் கடமை. மீண்டும் நான் தமிழக அரசையும், தமிழக மக்களையும் எச்சரிக்கிறேன். தமிழ்நாட்டில் 69 இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்திருக்கிறது.

இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, 69 சதவீதத்திற்கு மேல் பின் தங்கிய சமுதாயங்கள் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படுத்தினால் தான், அந்த ஆபத்து நீங்கும்.

என்னதான் 69 இட ஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் இருந்தாலும், இப்போது இருக்கிற நீதிபதிகள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவது போல் தெரியவில்லை. 

ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்பு இருக்கிறது. ஆனாலும், அதை மீறி சில நீதிபதிகள் தீர்ப்பு கொடுக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. உதாரணமாக EWS இட ஒதுக்கீடு எப்படி வந்தது. கணக்கெடுப்பு நடத்தாமல் கொடுத்தார்கள். அதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்திருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கிறது. பிரச்சனை இப்படி இருக்கிறது. 

நீதிபதிகள் என்ன தீர்ப்பு கொடுக்கப் போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. திடீரென்று இதனை ரத்து செய்தால், இதற்கு முழு பொறுப்பையும் ஸ்டாலின் தான் ஏற்க வேண்டும். இந்த அவப்பெயர் மரியாதைக்குரிய ஸ்டாலினுக்கு வரக்கூடாது. அப்படி வந்து விட்டால், வரலாற்றில் அவர் பெயர் தவறான முறையில் இடம்பெறும். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார்... சமூக நீதிக்கு துரோகம் செய்துவிட்டார்... என்று அவருக்கு ஒரு பட்டம் சூட்டப்படும். 

அதனால் தான் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன். இது தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ, அரசியலுக்காகவோ நான் சொல்லவில்லை. சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை சொல்கிறேன்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment