Thillaiyadi blast : தில்லையாடி நாட்டு வெடி ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் அங்கு பணியாற்றிய கிடங்கல் மாணிக்கம், மயிலாடுதுறை மதன், மகேஷ் , ராகவன் ஆகிய நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்ததையறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு வெடி ஆலைகள் மற்றும் பட்டாசு ஆலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிகளை கடுமையாக்க வேண்டும்; ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு செயல்வடிவம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் இத்தகைய விபத்துகள் தொடர்கதையாகின்றன. இனிவரும் காலங்களிலாவது பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கி இத்தகைய விபத்துகளைத் தடுக்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டிருக்கிறார். இது போதுமானது அல்ல. உயிரிழந்தவர்களின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“