தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால், பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், இன்னும் சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தலைநகர் சென்னையில் நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று செவ்வாய்கிழமை காலை நகரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் தேங்கியது. தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக தமிழக அரசின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.
இதற்கிடையில், சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் இன்று புதன்கிழமை வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. சில இடங்களில் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய அறிவிப்புகள் இன்னும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், " "சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்டை' வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால், இன்று மாலை வரை ஒரு துளி மழை கூட பெய்யவில்லை. அரசும், பொதுமக்களும் தயாராக இருக்கும் வகையில் வானிலை முன்னறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“