திருச்சியில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மீது திமுக ஊராட்சி மன்றத்தலைவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
இதைப்பற்றி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:
"திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி பச்சைமலையில் சட்ட விரோதமாக செம்மண் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது நரசிங்கபுரம் ஊராட்சித் தலைவர் மகேஸ்வரன் தலைமையிலான கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்தாக்குதலில் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மருத்துவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மணல் கொள்ளையை தடுக்க முயலும் அதிகாரிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் வெட்டிக் கொல்லப்பட்டார். அதனால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் மானாத்தாள் கிராமத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர் வினோத்குமாரை மணல் கடத்தல் கும்பல் ஓட, ஓட விரட்டி கொலை செய்ய முயன்றது.
மணல் கடத்தல் கும்பலால் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, தங்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் கோரி வரும் நிலையில் தான், துறையூர் பகுதியில் செம்மண் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளர் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடிப்போர் எந்த அச்சமும் இல்லாமல் வலம் வருகின்றனர்; இயற்கை வளங்களை காக்க நினைக்கும் அதிகாரிகள் தான் அஞ்சி நடுங்க வேண்டியிருக்கிறது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. கடந்த காலங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீதும், மணல் கொள்ளையை தடுத்த அதிகாரிகளைத் தாக்கியவர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல.
துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளரை தாக்கிய திமுக ஊராட்சித் தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போதுமானதல்ல. அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபட்டாலோ, அதைத் தடுக்கும் அதிகாரிகள் மீது கை வைத்தாலோ, அரசு எந்திரம் நம்மை சும்மா விடாது என்ற அச்சம் மணல் கொள்ளையர்களுக்கு ஏற்படும் அளவுக்கு இயற்கை வளங்களைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். தாக்குதலில் காயமடைந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தரமான மருத்துவம் அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.