பல லட்சம் மக்கள் வசிக்கும் வட சென்னையின் மத்திய பகுதியில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாக கூறி, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் மின் உலை ரூ.1,248 கோடி செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது, இது பேரழிவை ஏற்படுத்தும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பல லட்சம் மக்கள் வசிக்கும் வட சென்னையின் மத்திய பகுதியில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாக கூறி, ஆண்டுக்கு 7,66,000 டன்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் மின் உலையை ரூ.1,248 கோடி செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது பேரழிவை ஏற்படுத்தும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தால் திருவொற்றியூர்.மாத்தூர்,வியாசர்பாடி, மாதவரம், கொடுங்கையூர், ராயபுரம். காசிமேடு, மணலி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அண்ணாநகர், பெரம்பூர், புழல், செங்குன்றம், வில்லிவாக்கம், பாரிமுனை, கொளத்தூர், எழும்பூர், அயனாவரம்,சேப்பாக்கம்,புரசைவாக்கம், சேத்துப்பட்டு பகுதிகள் உள்ளன.
இவை அனைத்தும் குப்பை எரி உலை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்படும். புழல் ஏரி, ரெட்டேரி, கொரட்டூர் ஏரி ஆகியவற்றில் எரிஉலை விஷ சாம்பல் கலக்கும்.
அனல் மின் நிலையங்களுக்கு இணையானது:
நிலக்கரி அனல் மின்நிலையத்தை விட 28 மடங்கு அதிகடையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகும். ஏற்கனவே, மணலி, எண்ணூர் ரசாயன ஆலைகளால் கடும் காற்று மாசுபாடு ஏற்படும் நிலையில் புதிய எரிஉலையால் நிலைமை மிக மிக மோசமாகும்.
வட சென்னை குப்பை எரிஉலையிலிருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட ஏராளமான பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
உணவில் நச்சு சாம்பல்:
வட சென்னை குப்பை எரிஉலையிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு பரவும். வட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ரெட்டேரி, புழல் ஏரிகுடிநீரில் நச்சு சாம்பல் கலக்கும். இப்பகுதி உணவகங்களில் தயாராகும் உணவுப்பொருட்களில் கூட விஷச் சாம்பல் படியும். இதனால், வட சென்னையின் குடிநீரும் உணவும் நஞ்சாகும்.” என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.