/indian-express-tamil/media/media_files/2025/01/23/g1zFTYmWX5ffFccId6fL.jpg)
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கோவையில் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை விடுதி அறைக்கு வரவழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காததும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா வணிகம் தடையின்றி நடைபெறுகிறது. கஞ்சா உள்ளிட்ட அனைத்துப் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகிவிட்ட இளைய சமுதாயம், கொடூரமான குற்றங்களைக்கூட எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக செய்யும் மனநிலைக்கு வந்திருக்கிறது. இன்னொருபுறம் தமிழ்நாட்டில் எந்தக் குற்றங்களை வேண்டுமானாலும் செய்துவிட்டு, தண்டனையில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழல் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்குக் காரணமாகும். தமிழக அரசு, காவல்துறை ஆகியவற்றின் தோல்வியையே இக்கொடிய நிகழ்வு காட்டுகிறது.
தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம்தான் காரணம் என்பதால், அதன் புழக்கத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நான் நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், நாளுக்கு நாள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால், பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா? பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் குழந்தைகளை அச்சமின்றி அனுப்பி வைக்க முடியுமா? என்ற ஐயம் எழுகிறது. மக்கள் மத்தியில் நிலவும் இந்த ஐயமும், அச்சமும் போக்கப்படவில்லை என்றால், பெண் கல்வி பாதிக்கப்படுவது உட்பட மோசமான விளைவுகள் ஏற்படும். அத்தகைய விளைவுகள் ஏற்படுவதை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை ஆகும்.
கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் கஞ்சா விற்பனை நடைபெறவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். காவல்துறையில் உள்ள போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவை வலுப்படுத்தி, போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.