அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவிருக்கும் 100 நாள் நடைபயணத்திற்கு காவல்துறை தடை விதிக்கவில்லை. திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என பாமக வழக்கறிஞர் பாலு அறிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்கை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலு கூறுகையில், ‘அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவிருக்கும் 100 நாள் நடைபயணத்திற்கு காவல்துறையின் தடை என்பது ஒரு தவறான செய்தி. அப்படி எந்தத் தடையும் இல்லை.
நேற்று இரவு டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள், சட்ட ஒழுங்கு டி.ஜி.பி மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி., சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் பேசிய பிறகு, காவல்துறையினர் ஒரு சுற்றறிக்கை குறித்து தெளிவுபடுத்தினர்.
நேற்று நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை அன்புமணி ராமதாஸுக்குத் தடை விதிப்பதற்கான சுற்றறிக்கை அல்ல. இந்த நடைபயணத்திற்கு முன்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கொடுத்த ஒரு புகார் மனுவைத்தான் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம். எனவே இது தடை அல்ல, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தடை அல்ல என்பதை ஊடகங்கள் மூலமாக பாமக தரப்பு தெளிவுபடுத்துகிறது. இன்றைய தினம் செங்கல்பட்டு மற்றும் உத்திரமேரூர் ஆகிய இரண்டு இடங்களில் அன்புமணி ராமதாஸ் பயணம் தொடர உள்ளது. திட்டமிட்டபடி அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
காவல்துறை உரிய விளக்கத்தை அளித்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் தங்களது பயணம் தொடரும்.
சமீபத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கூறி, அதனை வழங்காமல் ஏமாற்றிய திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் கூடினர். எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் அந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. அதேபோன்று அன்புமணி ராமதாஸின் இந்தப் பயணமும் நிச்சயமாக பெரும் வெற்றியைப் பெறும்.
பாமகவின் பயணத்தின் முக்கிய நோக்கம், திமுக அரசு செய்திருக்கும் தவறுகள், அவர்கள் அளித்த வாக்குறுதிகள் மற்றும் தமிழக மக்களை எப்படி ஏமாற்றினார்கள் என்பது குறித்து மக்களிடம் எடுத்துரைப்பதே ஆகும். இந்தப் பயணம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
பாமகவின் எதிர்கால இலக்கு
அன்புமணி ராமதாஸ் நோக்கம், 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மருத்துவர் ராமதாஸ் நோக்கங்களை நிறைவேற்றுவது, அவரது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை ஒரு ஆளும் கட்சியாக மாற்றுவதற்கான ஒரு நல்ல நோக்கத்தோடு தான் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’, என்று பாலு தெரிவித்தார்.