Anbumani Ramadoss Press Meet To Explain On AIADMK Alliance: ‘ஊழல்ராணி ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வீர்களா?’ என சரமாரியான கேள்விகள் வீசப்பட்டன. எனினும் பிரஸ்மீட்டில் நிகழ்ந்த கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், அன்புமணி அவற்றுக்கு பதில் கூறவில்லை.
அன்புமணி ராமதாஸ், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் அதிமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். ஆளுனரிடம் ஊழல் பட்டியல் சமர்ப்பித்தது, இபிஎஸ் அரசு ஊழல்கள் குறித்து தனி புத்தகம் வெளியிட்டது ஆகியனவும் இதில் அடக்கம்!
இந்தச் சூழலில் பாமக, அதிமுக.வுடன் கூட்டணி அமைத்தது விமர்சனங்களுக்கு உள்ளானது. இது குறித்து திங்கட்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பதாக இரு தினங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
அதன்படி சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று பகல் 11.30 மணிக்கு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
DR Anbumani Ramadoss Press Meet on AIADMK-PMK Alliance LIVE UPDATES:
12:40 PM: செய்தியாளர் சந்திப்பின் தொடக்கத்தில், ‘தனித்து போட்டியிட்டபோது, மக்கள் ஆதரவு தராததால், கூட்டணி முடிவுக்கு வந்தோம்’ என குறிப்பிட்டார் அன்புமணி. பேட்டிக்கு இடையே, ‘ஊழல்ராணி ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வீர்களா?’ என சரமாரியான கேள்விகள் வீசப்பட்டன. எனினும் பிரஸ்மீட்டில் நிகழ்ந்த கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், அன்புமணி அவற்றுக்கு பதில் கூறவில்லை.
12:35 PM: தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, ‘அவரது குற்றச்சாட்டால் எங்கள் கூட்டணிக்கோ, கட்சிக்கோ பாதிப்பு இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்.
எனது கல்லூரி நண்பர் அவர். 30 ஆண்டுகளாக எனது மைத்துனர். அதையெல்லாம் மறந்துவிட்டு இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. எனது 3 மகள்களுக்கும் அவரது மடியில் வைத்து காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவர் இப்படி பேசியது எனக்கு மட்டுமல்ல, எனது மனைவிக்கும் வருத்தம்.
கலைஞர் இருந்தபோது எங்களை விமர்சிக்க துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை பயன்படுத்துவார். இப்போது விஷ்ணுபிரசாத் இப்படி விமர்சித்ததால், அவருக்கு ஒரு சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம். அவர் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை’ என கூறி பேட்டியை முடித்தார் அன்புமணி.
12:30 PM: ‘எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் அரசா, இல்லையா?’ என ஆங்கில செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு, ‘நாங்கள் கொடுத்த புகார் கவர்னரிடம் இருக்கிறது. அதில் உண்மை இருந்தால், அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
'ஊழல் அரசா, இல்லையா? என்பதற்கு நேரடி பதில் தேவை’ என செய்தியாளர் கேட்டபோது, அன்புமணி நேரடியாக பதில் கூறவில்லை.
12:20 PM: தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி, ‘திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் கூட்டணி பேசின. எங்கள் அய்யாவுக்கு முடிவு எடுக்க அங்கீகாரம் கொடுத்திருந்தோம். கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திய அடிப்படையில் அதிமுக.வுடன் கூட்டணிக்கு அய்யா முடிவெடுத்தார்’ என்றார்.
12:15 PM: ‘தேர்தல் வர்ற வரைக்கும் கூட்டணி இல்லை என்கிறீங்க. தேர்தல் வந்ததும் கரெக்டா கூட்டணிக்கு போயிடுறீங்க. இது மக்களை முட்டாள் ஆக்கும் வேலை இல்லையா?’ என கேட்கப்பட்டது.
அதற்கு அன்புமணி, ‘கூட்டணி பற்றித்தான் இவ்வளவு நேரமும் விளக்கம் அளித்தேன். என்ன பண்ணிக்கொண்டிருந்தீங்க?’ என கேள்வி எழுப்பினார்.
12:10 PM: ‘அதிமுக அரசு மீது ஆளுனரிடம் கொடுத்த புகாரில் உண்மை இருந்தால், அது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு’ என்றார் அன்புமணி.
12:08 PM: ‘பாட்டாளி மக்கள் கட்சியை வித்தியாசமான கட்சியாக கூறினீர்கள். இப்போது பாமக.வும் மற்றக் கட்சிகளைப் போலத்தான் என ஒப்புக் கொள்கிறீர்களா?’ என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அன்புமணி, ‘கூட்டணி சேர்ந்தாலும் நாங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதில்லை. 2006-ல் திமுக.வுடன் கூட்டணி அமைத்தாலும் விமர்சித்தோம். பாஜக.வுடன் கூட்டணி அமைத்தாலும் விமர்சனங்களை கைவிடவில்லை’ என்றார் அன்புமணி.
12:02 PM: தொடர்ந்து பேசிய அன்புமணி, ‘நாங்கள் விமர்சனங்களை முன்வைத்தது உண்மைதான். இந்தியாவில் விமர்சனம் வைத்த கட்சிகள் கூட்டணி அமைக்கக்கூடாது என்றால், யாரும் கூட்டணி அமைக்க முடியாது. உ.பி.யி. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும் வைக்காத விமர்சனம் இல்லை. மம்தா, காங்கிரஸை விமர்சித்தவர்தான். காங்கிரஸை எதிர்த்து உருவான கட்சிதான் காங்கிரஸ். இன்று கூட்டணி பேசவில்லையா?
தமிழ்நாட்டில் இந்திராவை திமுக செய்யாத விமர்சனமா? மதுரையில் இந்திரா மீது தாக்குதல் நடத்திவிட்டு, அந்த ரத்தம் குறித்து திமுக என்ன சொன்னது? திமுக மீது வைகோ வைக்காத விமர்சனமா?’ என கேள்விகளை எழுப்பினார் அன்புமணி.
12:00 PM: ‘பூரண மதுவிலக்கு என கூறிய அதிமுக இதுவரை 1000 கடைகளை மட்டுமே மூடியிருக்கிறது. பூரண மதுவிலக்கை இவர்கள் எப்படி அமுல்படுத்துவார்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதேபோல, ‘பல உரிமைகளை பறித்த மத்திய அரசுடன் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே?’ என்றும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அன்புமணி, ‘இவ்வளவு நாளும் வெளியில் இருந்து கோரிக்கை எழுப்பினோம். இனி கூட்டணியில் உள்ளே இருந்து வலியுறுத்தி நிறைவேற்ற வைப்போம். ஏற்கனவே மத்திய அரசில் இடம் பெற்றதால்தான் புகையிலை தடை உள்ளிட்டவற்றை எங்களால் செய்ய முடிந்தது’ என்றார் அன்புமணி.
12:00 PM: ஆளும்கட்சியான அதிமுக.வுடன் கூட்டணி அமைத்தால்தான் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்கிற நிலையில் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார் அன்புமணி.
11:50 AM : கூட்டணியை முன்னிட்டு அதிமுக.வுக்கு வைத்த 10 கோரிக்கைகளை பத்திரிகையாளர்களிடம் விவரித்தார் அன்புமணி. ராஜீவ் கொலைக் கைதிகள் 7 பேர் விடுதலை கோரிக்கை, மணல் கொள்ளை தடுப்பு, படிப்படியாக பூரண மதுவிலக்கு உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட அன்புமணி, இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தியே அதிமுக.வுடன் கூட்டணி அமைத்ததாக குறிப்பிட்டார்.
11:40 AM: டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரஸ் மீட் தொடங்கியது.
11:30 AM: சென்னை, தி.நகர் பாண்டி பஜாரில் அமைந்துள்ள ஜி.ஆர்.டி கன்வென்சன் அரங்கில் சற்று நேரத்தில் அன்புமணி ராமதாஸின் செய்தியாளர் சந்திப்பு தொடங்க இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.