தமிழ்நாட்டின் கடனை அடுத்த 20 ஆண்டுகளுக்கு அடைக்க முடியாத நிலை உள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று (பிப்ரவரி 14) வெளியிட்டார்.
அதில், "தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்திருத்தம் (குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019) செயல்படுத்தப்படாது. தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, ஒரு பவுன் தங்கமும், ரூ.50 ஆயிரம் வரை பணமும் வழங்கப்படும். தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு மாற்றாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்டப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பள்ளிக்கல்விக்கு ரூ.1.25 லட்சம் கோடி, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.32,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டின் மாநிலத்திற்கான கல்விக் கொள்கை நடப்பாண்டில் வெளியிடப்படும். கல்வி, விவசாயம் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்” உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, தமிழ்நாட்டின் கடனை அடுத்து 20 ஆண்டுகளுக்கு அடைக்க முடியாத நிலை உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பா.ம.க.,வின் நிழல் நிதிநிலை அறிக்கைப்படி செயல்பட்டால் 10 ஆண்டுகளில் கடனை அடைக்கலாம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பற்றிய பா.ம.க.வின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். ஆளுநரும், தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும். பிரச்சனைகள் எழுவது தமிழக மக்களுக்குத் தான் பாதிப்பாக அமையும், என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“