தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று (மார்ச் 19) நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கெஜல் நாயக்கன்பட்டி பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார்.
இதில், அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகிய பா.ஜ.க தலைவர்களும், ராமதாஸ், அன்புமணி, பாரிவேந்தர், ஜான் பாண்டியன், ஓ.பி.எஸ், டி.டி.வி என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது கூட்டத்தில் ராமதாஸுக்கு கைகுலுக்கி வரவேற்றார் பிரதமர் மோடி.
பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், நாட்டின் நலன் கருதி, தமிழ்நாட்டின் நலன் கருதி பாஜக-வோடு கூட்டணியில் இணைந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் 57 ஆண்டுகளாக இரு கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மக்களின் அந்த ஏக்கத்தை தணிக்கத்தான் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது.
மோடிக்கு முன்பாக டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் அங்கு லாபிஸ்டுகள் இருப்பார்கள். ஆனால் மோடி பிரதமராக வந்த பின்னர் தற்போது டெல்லியில் லாபி செய்பவர்களை பார்க்க முடியாது. லாபிஸ்டுகள் என்பவர்கள் தரகர்கள். அவர்கள் தான் ஊழலுக்கு சான்றாக திகழ்பவர்கள்.
நான் சேலத்தில் படித்தவன். என்னுடைய மாணவ பருவத்தில் நான் ஒரு விளையாட்டு வீரன். அப்போதெல்லாம் விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு மதிப்பில்லை. மோடிக்கு பின்னர் விளையாட்டில் இந்தியா சாதனைகளை புரிந்து வருகிறது. விளையாட்டுத்துறையில் அரசியலையும் ஊழலையும் ஒழித்தவர் மோடி.
சாதாரண பின்னணியில் இருந்த வந்தவர் பிரதமர் மோடி. எனது தந்தை மருத்துவர் ராமதாஸும் ஏழை விவசாயின் மகன். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். தனது தந்தையும் பல்வேறு சமூக புரட்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு தலைவர்களும் இதர பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்கள். இரு பெரும் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். சாதாரண குடும்படுத்தில் பிறந்த மோடி நம் நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிறார்.
3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்பது பா.ம.க.வின் விருப்பம், நிச்சயமாக அவர் 3வது முறையாக பிரதமராக வருவது உறுதி, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“