anbumani ramadoss: ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54ஆவது அமர்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் முன்னாள் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கடந்த பல பத்தாண்டுகளாகவே இனவாதம், பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான 21-ஆம் நூற்றாண்டின் முதலாவது அட்டூழியம் மற்றும் குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அழைப்பை செயல்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புடைமைத் திட்டத்தின் (OHCHR’s Sri Lanka Accountability Project-SLAP) திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களைக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது .
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“