Advertisment

அளவு குறைவு, விலை அதிகம்; ஆவின் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்? அன்புமணி சரமாரி கேள்வி

"அளவோ குறைவு... விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?" என்று குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் பா.ம.க. தலைவர் அன்புமணி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss TN GOVT Aavin Green Magic Plus scam Tamil News

"ஆவின் நிறுவனத்தின் இந்த மோசடி மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், புதிய பால் அறிமுகம் குறித்த செய்திக் குறிப்பில் பாலின் தன்மை குறித்தும், விலை குறித்தும் எந்தத் தகவலையும் ஆவின் நிறுவனம் வெளியிடவில்லை" என்று அன்புமணி கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:- 

Advertisment

அளவோ குறைவு... விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் புதிய பச்சை உறை  பால் வரும் 18-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்று  ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக ஆவின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் பாலின் தன்மை குறித்த விவரங்களோ, விலையோ இல்லை; மாறாக விட்டமின் ஏ, டி ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பதாக மட்டும் தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய பாலின் தன்மைகள் குறித்து  ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் விசாரித்த போது தான் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன.

அளவு குறைப்பு, விலை அதிகரிப்பு ஆகிய இரண்டை தவிர புதிய பாலில் எந்த புதுமையும் இல்லை. தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22க்கு விற்கப்படுகிறது. அதில் 4.5% கொழுப்புச் சத்து, 9 % கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாலிலும் இதே சத்துகள், இதே அளவில் தான் உள்ளன. கூடுதலாக விட்டமின் ஏ, டி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பயன்களும், அதற்காக ஆவின் நிறுவனத்திற்கு ஆகும் செலவும்  குறிப்பிடத்தக்கவை அல்ல.

Advertisment
Advertisement

ஆனால், கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் நிலையில்,  கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிரீன் மேஜிக் பால்  500 மி.லி  ரூ.22க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25க்கு விற்கப்படும். அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலுடன்  பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக  சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.

ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் கூடுதல் வகையாக மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அதை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால், தமிழ்நாடு முழுவதும்  ஆவின் கிரீன் மேஜிக் பால்  வினியோகம் 80% குறைக்கப்பட்டு விட்டது. முதற்கட்டமாக  காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம்  ஆகிய மாவட்டங்களில்   கிரீன் மேஜிக் பிளஸ்  பால்  அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விலையில் மாநிலம் முழுவதும் இதை விரிவுபடுத்தி விட்டு,  லிட்டர் ரூ.44க்கு விற்கப்படும் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தி விடுவது தான்  ஆவின் நிறுவனத்தின் திட்டம். இதன் மூலம் ஆவின் பச்சை உறை பாலை  நுகர்வோர் வேறு பெயரில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.  

பாலின் விலை உயர்வு அதிகமாக தெரியக்கூடாது என்பதற்காக ஓர் உறையின் விலையை ரூ.3 உயர்த்தி விட்டு, பாலின் அளவை 50 மிலி குறைத்திருப்பது அப்பட்டமான மோசடி ஆகும். பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனமே இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் மக்களுக்கு நன்மை செய்வதில் புதுமைகளை புகுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், மக்களை ஏமாற்றுவதில் இத்தகைய  புதுமைகளை புகுத்தக் கூடாது. பெயரை மாற்றி மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா? என்பதை அரசும், ஆவின் நிறுவனமும் விளக்க வேண்டும்.

கடந்த அக்டோபர் மாதமே ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ்  பால் விற்பனை திருச்சி மண்டலத்தில் விற்பனை செய்யப்படுவதாக செய்தி வெளியானது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 18-ஆம் நாள்  நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அது தொடர்பாக விளக்கமளித்த  ஆவின் நிறுவனம், ’’பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது” என்று கூறியிருந்தது. ஆனால், பொதுமக்களின் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை; இதர கொழுப்புச் சத்துகளும் உயர்த்தப்படவில்லை. மாறாக,  அளவைக் குறைத்து, விலையை உயர்த்துவது எந்த வகையில் நியாயம்?

ஆவின் நிறுவனத்தின் இந்த  மோசடி மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், புதிய பால் அறிமுகம் குறித்த செய்திக் குறிப்பில் பாலின் தன்மை குறித்தும்,  விலை குறித்தும் எந்தத் தகவலையும் ஆவின் நிறுவனம் வெளியிடவில்லை. இந்த நடத்தையை என்ன பெயரிட்டு அழைப்பது? அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44  என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aavin Tamil Nadu Govt Aavin Milk Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment