Advertisment

சென்னையில் வெள்ளம் என்பது பேரிடர்; திருப்புகழ் கமிட்டி அறிக்கையை வெளியிடாதது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னையில் மழைநீர் வடிகால்வாய்களை அமைத்ததைத் தவிர திருப்புகழ் குழுவின் எந்த பரிந்துரையையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்பது தான் உண்மை; அறிக்கையை உடனே வெளியிட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

author-image
WebDesk
New Update
PMK leader Anbumani Ramadoss condemns TN govt to set up separate commission to raise bus fares Tamil News

சென்னை வெள்ளத்தடுப்புத் திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 13 மாதங்களாகியும் தமிழக அரசு வெளியிடாதது ஏன்? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

”சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 18 மாதங்களாகிவிட்ட நிலையில், அந்த அறிக்கை இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை. சென்னை மாநகர மக்களின் மழைக்கால பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணத்தை, ஏதோ ரகசிய ஆவணம் போன்று முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2021-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழையும், அதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சென்னையில் எத்தகைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய இ.ஆ.ப. அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ஆம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதியும் தமிழக அரசிடம் தாக்கல் செய்தது. 

பேரிடர் தடுப்பு தொடர்பான வல்லுனர் குழுவின் அறிக்கைகள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் போது, அதை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, அதன் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன? என்பது குறித்த திட்டத்தை வெளியிட வேண்டியதும், அதன் மீது விவாதம் நடத்த வேண்டியதும் அரசின் கடமை ஆகும். ஆனால், திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 18 மாதங்கள் ஆகியும் அந்தக் கடமையை தமிழக அரசு செய்யவில்லை. 

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக திருப்புகழ் குழுவின் அறிக்கைப்படி வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக கிளிப்பிள்ளையைப் போன்று தமிழக அமைச்சர்கள் கூறுவது வழக்கமாகி விட்டது. ஆனால், இது அப்பட்டமான பொய். திருப்புகழ் குழு அறிக்கை செயல்படுத்தப்பட்டதாக கூறும் அமைச்சர்களில் பலருக்கு அந்த அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்பது கூட தெரியாது. 

மழைநீர் வடிகால்வாய்களை அமைத்ததைத் தவிர திருப்புகழ் குழுவின் எந்த பரிந்துரையையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்பது தான் உண்மை. அவ்வாறு செயல்படுத்தியிருந்தால் கடந்த ஆண்டு பெய்த மழையால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டிருக்காது. இப்போதும் கூட ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்தால் கூட சென்னையில் வெள்ளம் ஏற்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், 50 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலும் அதை சென்னை தாங்கும் என்று அமைச்சர்களும் வசனம் பேசி வருகின்றனர். உண்மை நிலை என்ன? என்பது வடகிழக்குப் பருவ மழை பெய்யும் போது தான் தெரியும். 

சென்னையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான திருப்புகழ் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டால் தான், அதன் பரிந்துரைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு விட்டனவா? என்பதை அறிய முடியும். ஆனால், அந்த அறிக்கையின் விவரங்களை மர்மமாகவே வைத்திருப்பது ஏன்? சென்னையில் வெள்ளத்தைத் தடுக்க திருப்புகழ் குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு திசம்பர் மாதம் 10-ஆம் நாள் இது தொடர்பாக நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதைத் தொடர்ந்து கடந்த திசம்பர் மாதமே திருப்புகழ் குழு அறிக்கை வெளியிடப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், எதுவும் நடக்கவில்லை. 

சென்னையின் வெள்ளம் என்பது பெருந்துயரத்தை ஏற்படுத்தும் பேரிடர் ஆகும். அதில் தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது. எனவே, திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, திருப்புகழ் குழுவில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் எத்தனை? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நடவடிக்கை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Tamilnadu Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment