ராமதாஸின் புகார் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் காரணம் காட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவிருந்த "உரிமை மீட்க, தலைமுறை காக்க" என்ற 100 நாள் நடைபயணத்திற்கு தமிழக காவல்துறை டிஜிபி தடை விதித்துள்ளார். இதற்கான உத்தரவை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மாநகர காவல் ஆணையர்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" என்ற இந்த நடைபயணத்தை அன்புமணி ராமதாஸ் நேற்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் தொடங்கினார். 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக அன்புமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் நடைபயணத்திற்கு தமிழக காவல்துறை டிஜிபி தடை விதித்து இதற்கான உத்தரவை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மாநகர காவல் ஆணையர்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து டிஜிபி அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த மனுவின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது அனுமதி இல்லாமல் பாமக கொடியையோ, கட்சியின் பெயரையோ அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த நடைபயணம் பாமகவில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ராமதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இருதரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதால், நடைபயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் பாமக நிறுவனரின் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் அன்புமணியின் 100 நாள் நடைபயணத்திற்கு எந்த நிலையிலும் அனுமதி வழங்கப்படாது என்று டிஜிபி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். சுருக்கமாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது தந்தை மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் அனுமதியின்றி நடைபயணம் மேற்கொள்வது கட்சிக்குள் மேலும் பிளவை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த நடைபயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் நடைப்பயணத்துக்கு தடையில்லை, என்று பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். அன்புமணி ராம்தாஸின் தமிழக உரிமை மீட்பு பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது என்றும் பாமக வழக்கறிஞர் பாலு குறிப்பிட்டுள்ளார்.