/indian-express-tamil/media/media_files/2025/07/27/anbumani-2025-07-27-19-23-15.jpg)
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், "உரிமை மீட்க, தலைமுறை காக்க" என்ற முழக்கத்துடன் தொடங்கிய தனது 100 நாள் நடைபயணத்தின் மூன்றாம் நாளான இன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு மற்றும் கள ஆய்வுகளை மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வையாவூர் மற்றும் நத்தப்பேட்டை ஏரிகள் காஞ்சிபுரம் மாநகராட்சியின் கழிவுநீரால் மாசடைந்து வருவதாகக் கூறி, அப்பகுதி மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஏரிகளை நேரில் ஆய்வு செய்தார்.
புகழ்பெற்ற காஞ்சி பட்டுச் சேலைகளுக்குப் பெயர்பெற்றதும், கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியுமான பிள்ளையார்பாளையத்தில், அன்புமணி ராமதாஸ் நேரடியாக நெசவாளர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். நெசவு செய்யும் முறை குறித்து நெசவாளர்களிடம் கேட்டறிந்ததுடன், தானும் நெசவு செய்து பார்த்தார். இது நெசவாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
வையாவூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டபோது, ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த ஃபிளமிங்கோ பறவைகளை அன்புமணி ராமதாஸ் ஊடக நண்பர்களின் கேமராவில் அழகாகப் படம் பிடித்தார். "இந்த நாட்டுப் பறவைகள் இவ்வளவு தூரம் வருவது அதிசயமான ஒன்று" என்று அவர் தெரிவித்தார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் அன்புமணி ராமதாஸைச் சந்தித்து நெகிழ்ச்சியான முறையில் பேசினார். "வையாவூர் ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துதான் பொங்கல் வைப்போம். ஆனால் இப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி கழிவுநீரால் மாசு அடைந்துள்ளது. ஏரியை மீட்டுக் கொடுங்கள். உங்களைத் டிவியில் தான் பார்த்திருக்கிறேன்" என்று கூறி, அன்புமணிக்கைச் சுற்றிப் போட்டு "செல்லம்" என்று கொஞ்சிய சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.