Advertisment

வட மாநிலங்களில் நடந்த கொடூரம் தமிழகத்திலும்? அன்புமணி, வானதி சீனிவாசன் கண்டனம்

ஒடிசாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே கேள்விப்பட்ட அவலம் தமிழ்நாட்டிலுமா? - அன்புமணி ராமதாஸ்

author-image
WebDesk
May 29, 2023 17:10 IST
vanathi srinivasan, anbumani ramadoss

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, பாம்பு கடித்து இறந்தது. சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு தக்க சமயத்தில் கொண்டுசெல்ல முடியாமல் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

Advertisment

மேலும், சுமார் 10 கிலோமீட்டருக்கு குழந்தையின் சடலத்தை பெற்றோர் தூக்கிக்கொண்டு நடந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்பற்றி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: "சாலை இல்லாததால் பச்சிளம் குழந்தையின் உடலை 10 கி.மீ தொலைவுக்கு நடந்து சுமந்து சென்ற பெற்றோர்; இந்த அவலம் இன்னொரு முறை தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்து விட்டது; உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீண்டு வர இயலவில்லை.

ஒதிஷாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே கேள்விப்பட்ட அவலம் தமிழ்நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதி கிராமங்களுக்கு பெரும்பாலும் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டன. அத்திமரத்துக் கொல்லை என்பது மலைக்கிராமம் என்பதால் தான் சாலை அமைக்கப்படவில்லை என்ற காரணத்திற்குள் நுழைந்து தப்பிவிட நாம் முயலக்கூடாது. அத்திமரத்துக் கொல்லை கிராமத்திலிருந்து சாலை அமைப்பது சாத்தியம் தான்; இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அங்கு சாலை அமைக்கப்படவில்லை என்பது அரசு நிர்வாகம் தலைகுனிய வேண்டிய அவலம் தான்.

அத்திமரத்துக் கொல்லை போன்று சாலை வசதி இல்லாத கிராமங்கள் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன. விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் சாலை வசதி இல்லை என்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மலைப்பகுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் கூடுதல் நிதியும், மானியமும் ஒதுக்கப்படும் நிலையில், அதைப் பயன்படுத்தி சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது. அதிவிரைவுச் சாலைகளும், எட்டுவழிச் சாலைகளும் அதிக அளவில் அமைக்கப்பட்டு வரும் சூழலில், மலைக்கிராமங்களுக்கு சாலையே இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய வளர்ச்சி இடைவெளி ஆகும். அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதைப்பற்றி வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளதாவது, "பாம்பு கடித்த குழந்தையை சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாமல் செல்லும் வழியிலேயே குழந்தை உயிர் இழந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்து திரும்பும் வழியில் சாலை வசதி இல்லை என்று கூறி ஆம்புலன்ஸ் இல் இருந்து இறக்கி விடப்பட்டு, 10 km தூரம் குழந்தையின் பெற்றோர் அழுதபடி குழந்தையை சுமந்து சென்ற அவலம், நம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது நெஞ்சை பதர செய்கிறது. "திராவிட மாடல் ஆட்சி" என பெருமை பேசும் அரசின் அலட்சியம் கண்டிக்க தக்கது.

தமிழக அரசு , இக் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்குவதோடு கிராமத்திற்கு சாலைவசதி ஏற்படுத்த வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vanathi Srinivasan #Anbumani Ramadoss #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment