அதானியை சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்திய நிலையில், “அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஒரு அறிக்கை விடுவார். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதற்கு, அன்புமணி ராமதாஸ், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராமதாஸ் குறித்த பேச்சுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் லஞ்சப் புகார் எழுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழிலதிபர் அதானியை சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு, அவருக்கு இப்போது வேற வேலை இல்லை. தினமும் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஓ.கே” என்று காட்டமாக பதிலளித்தார்.
அன்புமணி கண்டனம்
ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதற்கு, கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின் தனது ஆணவப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இந்தியாவில் மூத்த அரசியல் தலைவர், பிரதமர் மோடியால் போற்றப்பட்டவர், டாக்டர் ராமதாஸுக்கு 86 வயது ஆகிறது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரை இவ்வளவு ஆணவத்துடன் பேசுவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு அழகு கிடையாது. தொழிலதிபர் அதானியை நீங்கள் எதற்கு ரகசியமாக சந்தித்தீர்கள் என டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் உரிமை, பதில் சொல்வது உங்களுடைய கடமை. அதைவிட்டுவிட்டு எங்களுடைய மருத்துவர் ஐயாவை (டாக்டர் ராமதாஸ்) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி உள்ளார். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது; டாக்டர் ராமதாஸ் இல்லையென்றால், உங்கள் தந்தை கருணாநிதி 2006-ல் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது. மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதாவால் விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டாக்டர் ராமதாஸ் முழு ஆதரவு கொடுத்தார். அதனால்தான், உங்கள் தந்தை கருணாநிதி ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருக்க முடிந்தது. உங்களை துணை முதலமைச்சராக ஆக்கினார்” என்று கூறினார்.
மேலும், டாக்டர் ராமதாஸ் இல்லையென்றால், உங்கள் உங்கள் தந்தை கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது; இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரை, இந்தியாவில் 6 இடஒதுக்கீடுகளைப் பெற்றுத் தந்த 86 வயது சமூக சீர்திருத்த வாதியை அவருக்கு வேறு வேலை இல்லை என்று சொல்வது எவ்வளவு ஆணவம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய தந்தை கருணாநிதியிடம் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. முதலமைச்சரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பேச்சுக்கு டாக்டர் ராமதாஸுக்கு முதலில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்; மன்னிப்பு கேட்ட வேண்டும். இல்லை எங்கள் தொண்டர்களுடைய உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது.” என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி அறிக்கை
இதனிடையே, 'தமிழக மானம் அமெரிக்காவில் கப்பலேறுகிறது; மக்கள் பணம் கொள்ளை போகிறது. முதல்வர் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்' என்று பா.ம.க தலைவர் அன்புமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டிருக்கும் அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருப்பது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்கள் வினா எழுப்பிய போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கிறார். ‘இராமதாஸுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது’ என்று கொந்தளித்திருக்கிறார். இதைக் கேட்டவுடன் இப்படி ஒரு முதலமைச்சரை பெறுவதற்கு தமிழகம் என்ன புண்ணியம் செய்ததோ? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கத் தேவையில்லை. அந்த அளவுக்கு ராமதாஸ் ஒன்றும் தவறாக எதையும் கேட்டுவிடவில்லை. ‘‘அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,- அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று தான் அவர் வினா எழுப்பியிருந்தார். அது மிகவும் சரியானதே.
அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மானம் அமெரிக்காவில் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுமானால் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவும் அரசியல் கட்சியின் நிறுவனராகவும் ராமதாஸ் அவர்களுக்கு அக்கறை இருக்கிறது. அதனால் தான் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அதானி நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தின் தலைவர் அதானியும், அவரது புதல்வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்தும், அதானியுடனான சந்திப்பு அலுவல்பூர்வமானதா, தனிப்பட்ட முறையிலானதா? என்பது குறித்து தமிழக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடமை தானே?
அந்தக் கடமையைச் செய்வதற்கு மாறாக, ராமதாஸுக்கு வேலை இல்லை; அதனால் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்; அவருக்கெல்லாம் நான் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தைத் தான் காட்டுகிறது. அரசின் செயல்பாடுகள் பற்றி எழுப்பப்படும் வினாக்களுக்கு பதில் கூறாமல் இருக்க அவர் ஒன்றும் மறைந்த ரஷ்ய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினும் இல்லை; தமிழ்நாடு ஒன்றும் அவர்களின் குடும்ப சொத்தும் இல்லை. தமிழ்நாட்டில் பதிவான வாக்குகளில் வெறும் 40 விழுக்காட்டினரின் ஆதரவை மட்டுமே பெற்று முதலமைச்சர் பதவிக்கு வந்தவர் தான் ஸ்டாலின் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். அதிகாரம் நிரந்தரமானது அல்ல. தமிழ்நாட்டில் மட்டுமல்ல.... ஒட்டுமொத்த உலகத்திலும் எங்களைக் கேள்வி கேட்க முடியாது? என்ற இறுமாப்பில் திளைத்தவர்களின் நிலை என்னவானது? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். அதானி ஊழலில் மின்சார வாரியத்திற்கு உள்ள தொடர்பு குறித்து பதில் கூறித்தான் ஆக வேண்டும்.
நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுமானால் அதானிகளை ரகசியமாக சந்திப்பது போன்ற ஏராளமான வேலைகள் இருக்கலாம். ஆனால், ராமதாஸுக்கு மக்கள் நலன் குறித்து சிந்திப்பதும், அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவதும் தான் வேலை. அதைத்தான் அவர் செய்து வருகிறார்.
அவர் செய்த பணிகளால் தான் தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகள் வென்றெடுக்கப்பட்டன. அவர் செய்த வேலைகளால் தான் தமிழ்நாட்டில் 3321 மதுக்கடைகளும், தேசிய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளும் மூடப்பட்டன. அவர் மேற்கொண்ட பணிகளால் தான் 108 அவசர ஊர்தித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அவர் கொடுத்த அழுத்தத்தால் தான் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டது. அவர் கொடுத்த ஆதரவால் தான் 2006&ஆம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராக முடிந்தது; மு.க.ஸ்டாலின் முதல் முறையாக அமைச்சராக முடிந்தது. அவர் கலைஞரைக் கேட்டுக் கொண்டதால் தான் 2009 ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக முடிந்தது. அவர் கைகாட்டியதால் தான் மு.க.ஸ்டாலினின் தந்தை கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட முடிந்தது. அவர் நடத்திய போராட்டங்களால் தான் சென்னைக்கு வெளியில் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை மக்களிடமிருந்து பறித்து துணை நகரங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் திமுக அரசின் கபளீகர திட்டம் தடுக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டுக்கு மு.க.ஸ்டாலின் அவர்களால் விளைந்த ஒரு நன்மையைக் கூற முடியுமா? பதவி வரும் போது பணிவும் வரவேண்டும், துணிவும் வர வேண்டும் என்பார்கள். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எதுவுமே வரவில்லை. இனியாவது பதவிக்கேற்ற பக்குவத்தையும், பணிவையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். ராமதாஸ் அவர்கள் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அதானி ஊழலில் மின்சார வாரியத்திற்கு உள்ள பங்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தமிழிசை கண்டனம்
டாக்டர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்; ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்துகளை வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்; யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப்போவதில்லை; வேலையின்றி இருக்கப்போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
அதே போல, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான, ஐயா ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
தி.மு.க ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும். ஐயா ராமதாஸ் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?
அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.