மதுரை பழங்காநத்தத்தில் பா.ம.க 36-வது ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் இன்று (செப்.16) நடைபெற்றது. அக்கட்சியின் மதுரை மத்திய மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் திருமாவளவனின் சமீபத்திய வீடியோ விவகாரம், தி.மு.க ஆட்சி, பட்டியல் சமூக மக்கள் பிரச்சனை உள்ளிட்டவற்றை பேசினார்.
அன்புமணி பேசுகையில், "தமிழகத்தில் 57 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் தொழில்வளம் பெறவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகள் சூழ்ச்சியிட்டு சமுதாய அடிப்படையில் மக்களை பிரித்து சண்டை மூட்டி அரசியல் பிழைப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் ஒட்டுமொத்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் பாமகவின் நோக்கம். திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி வாய்ப்பளித்து தமிழகம் சீரழிந்துள்ளது. பாமகவுக்கு ஒருமுறை கொடுத்துப்பாருங்கள். ஒருபைசா செலவின்றி பள்ளி, கல்லூரி கல்வி, தரமான சுகாதாரம் தருவோம். நல்ல அரசாங்கம் என்பது கல்வியில், சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் திமுக அரசு சாராயத்தில் முதலீடு செய்கிறது.
தமிழக முதல்வர் 17 நாள் அமெரிக்க பயணம் முடிந்து. தமிழகத்திற்கு வந்தார். ரூ.7,600 கோடி ரூபாய் முதலீடு பெற்றுக்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். தெலங்கானா முதல்வர் 5 நாள் பயணத்தில் 30 ஆயிரம் கோடி முதலீடு பெற்று வந்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது வெறும் கையெழுத்து மட்டுமே. இப்படி கணக்கு காட்டி விளம்பரப்படுத்தி ஏமாற்றுவது தான் திமுகவின் வேலை" என்று விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "திருமாவளவன் எண்ணமும், மருத்துவர் ராமதாஸ் எண்ணமும் ஒன்று தான். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் ராமதாஸும், திருமாவளவனும் போராடிவருகிறார்கள். பாமகவுக்கும் விசிகவுக்கும் கொள்கை ஒன்றுதான்.
இருவரின் கருத்தும் ஒன்றுதான். ஆனால் திருமாவளவன் வேறு திசையில் சென்றுவிட்டார். அவர் தற்போது குழப்பத்தில் உள்ளார். கடந்த காலத்தை பற்றி பேசாமல், ஆட்சி அதிகாரம் எப்படி பெற வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டு்ம். திமுகவுக்கும் பட்டியலின சமுதாய மக்களுக்கும் சம்பந்தம் கிடையாது.
திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது. திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் உள்ளனர். இதில் 34-வது அமைச்சராக தேவேந்திர வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கயல்விழி, 33வது இடத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் மதிவேந்தன், 31வது இடத்தில் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த கணேசன் அமைச்சராக உள்ளார். இதிலிருந்தே திமுகவின் வன்மம் தெரிகிறது. இதுதான் பட்டியலின மக்களுக்கு தி.மு.க தரும் மரியாதையா?" என்று காட்டமாக கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.