/indian-express-tamil/media/media_files/2025/05/24/9mtau4KSR5a9qrkgYFH4.jpg)
தங்களுடைய குடும்ப பிரச்சனையில் மற்றவர்கள் யாரும் தலையிட தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், கடத்தூரில் இன்று (மே 24) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது, அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.
அதன்படி, "ஒரு மாநாட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நாம், அடுத்தபடியாக திட்டமிட்டு ஆட்சியை பிடிக்க முடியாதா என்ன? பல தடைகளை கடந்து இந்த மாநாட்டை நடத்தி முடித்தோம். அதனை வெற்றிகரமாக செய்தோம். பல்வேறு வழக்குகளை இதற்காக பா.ம.க எதிர்கொண்டது.
தற்போதைய சூழலில் நமக்கு விவேகம் தான் முக்கியம். நாம் வேகமாக செயல்பட வேண்டிய நேரம் வரும். அப்போது என்ன செய்ய வேண்டும் என்று நானே கூறுவேன். ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கும் ஒரு இயக்கம் தான் பா.ம.க. தொண்டர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்தோம்.
நமக்கு இடஒதுக்கீடு கொடுக்காத தி.மு.க தான் நம்முடைய எதிரி. ஒரு மாதமாக பயங்கர மன உளைச்சலில் இருந்தேன். எனக்கு உறக்கம் வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன்? என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் ஏன் மாற்றப்பட்டேன்? அப்படி என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.
ராமதாஸின் லட்சியங்களை நிறைவேற்றுவது தான் என்னுடைய கனவு. இவ்வளவு காலம் ராமதாஸ் என்ன சொன்னாரோ, அவை அனைத்தையும் செய்து முடித்தேன். இனியும் ராமதாஸ் என்ன சொல்கிறாரோ அதனை அவரது மகனாகவும், கட்சியின் தலைவராகவும் செய்து முடிப்பேன்.
எங்கள் குடும்ப பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது. தமிழ்நாட்டில் பா.ம.க ஆட்சியை பிடிக்கும் நாள் வெகு தொலையில் கிடையாது. திட்டமிட்டு ஆட்சியை பிடிப்போம்" என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.