எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறும். உட்கட்சி பிரச்சனை குறித்து நீங்கள் பேச வேண்டாம் நாங்கள் பேசிக் கொள்வோம் என தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸை சந்தித்தப் பின் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் நேற்று பரபரப்பு ஏற்படுத்திய பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையே கருத்து மோதல் பெரும் பேசும் பொருளாக ஆகியது.
இதனையடுத்து ஜி.கே மணி தலைமையிலான பா.ம.க குழு இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அதன் படி இன்று முக்கிய நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்து வந்தனர்.
முகுந்தனுக்கு பதவி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. நேற்று இரவு முகுந்தனின் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தைலாபுரம் சென்று ராமதாசை சந்தித்த நிலையில் இன்றைக்கு சமாதான பேச்சு வார்த்தை நடந்தது.
ஏற்கனவே முகுந்தன் பாட்டாளி ஊடகப் பேரவை மாநில செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மட்டும் வகிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திகேயன், வழக்கறிஞர் பாலு ஆகியோர் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்தனர். பின்பு அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து தைலாபுரத்திற்கு வந்தனர். பின்னர் ராமதாஸ், அன்புமணி மற்றும் நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது;
இன்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் அய்யாவிடம் கட்சியின் வளர்ச்சி பற்றி வருகின்ற சட்டமன்ற தேர்தலை பற்றியும், சித்திரை முழு நிலவு மாநாடு பற்றியும், போராட்டங்கள் பற்றியும், விவசாய மாநாடு பற்றியும், அடுத்த கட்டமாக என்னென்ன போராட்டங்கள் எந்தெந்த பகுதியில் செய்யலாம் எனவும் இன்று குழுவாக விவாதிக்கப்பட்டது.
வரும் ஆண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு. மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எல்லாம் எப்படி எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது. மேலும், 10.5 விழுக்காடு ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்தும் அய்யா தலைமையில் விவாதிக்கப்பட்டது.
எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம். உட்கட்சி பிரச்சனை குறித்து நீங்கள் பேச வேண்டாம், நாங்கள் பேசிக் கொள்வோம் என தெரிவித்து சந்திப்பை முடித்துக் கொண்டார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.