Advertisment

பெண்கள் உயிர் நிலையில் மிளகாய் தூள் கொட்டி சித்ரவதை: ஆந்திர போலீசுக்கு திருமா, வேல்முருகன் கண்டனம்

"மற்றவர்கள் சிறைப்படுத்தப்பட்டார்களா அல்லது அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பதை இதுவரை தெரியவில்லை" - வி.சி.க., தலைவர் திருமாவளவன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thirumavalavan, velmurugan

ஆந்திரா மாநில காவல் துறையினர் குறவர் குடியினர் மீது செலுத்திய வன்முறையை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் வேல்முருகன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதைப்பற்றி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கடந்த ஜூன் - 11 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள புலியாண்டப்பட்டியில் வசிக்கும் குறவர் குடியைச் சார்ந்த அய்யப்பன் என்பவரை ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்நிலையத்திலிருந்து வந்த காவல்துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர்.

அதனைத் தட்டிக் கேட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சித்தூருக்குக் கொண்டு சென்றுள்ளனர். அது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு இணையவழியாகப் புகார் செய்துள்ளனர். அதனால், ஆத்திரமடைந்த சித்தூர் காவல் நிலையத்தினர் மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து மேலும் மூவரைக் கைது செய்துள்ளனர்.

மொத்தம் ஒன்பது பேரைக் கைது செய்து சித்தூர் காவல்நிலையத்திலேயே வைத்து விசாரணை என்னும் பெயரில் குரூரமான வகையில் அரச வன்கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். குறிப்பாக, பெண்களைத் துன்புறுத்தி வல்லுறவு வன்கொடுமைக்கு முயன்றுள்ளனர் என்றும்; அவர்தம் உயிர்நிலையில் மிளகாய்ப் பொடியைக் கொட்டி இழிநிலையில் வதைத்துள்ளனர் என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டதன் பின்னர், அவர்களில் இருவரைத் தவிர மற்றவர்களை விடுவித்துள்ளனர். மற்றவர்கள் சிறைப்படுத்தப்பட்டார்களா அல்லது அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பதை இதுவரை தெரியவில்லை.

எனவே, அவ்விருவரின் நிலையைக் கண்டறியவும், உயிருடனிருந்தால் அவர்களை மீட்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். பெண்கள் மற்றும் சிறுவர் உள்ளிட்டோர் மீது பொய்வழக்குகள் புனையப்பட்டிருந்தால் அவற்றை விலக்கிட ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுத்துகிறோம். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியுள்ளதாவது: "கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், 5 பெண்கள் உட்பட 9 குறவர் இன மக்களை கடத்தி சென்ற ஆந்திரா சித்தூர் காவல்துறையினர், 5 நாட்களாக அடைத்து வைத்து அடித்து சித்திரவதைப் படுத்தியுள்ளனர்.

மேலும், பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து, பெண்களின் உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி, இரும்புக் கம்பியால் கொடூரமாக குத்தி கொடுமைப்படுத்தி இருப்பது அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

கடந்த 11.6.2023 அன்று, இரவு நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்துறையினர் வந்துள்ளனர்.

எதற்காக இரவு நேரத்திலேயே அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்ட அருணா (27), கண்ணம்மாள்(65) ஸ்ரீதர்(7) உள்ளிட்ட 7 பேரை, வீட்டிற்குள் இருந்து வெளியே தர தரவென இழுத்து வந்து, வன்மையாக தாக்கி பொய் வழக்கு போடும் நோக்கில், 15க்கும் மேற்பட்ட போலீசார் இழுத்து சென்றுள்ளனர். இதனை அறிந்த ஐயப்பனின் சகோதரி சத்யா (40) என்பவர் ஜூன் 12 அன்று, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலமாக புகார் செய்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த ஆந்திர காவல்துறையினர் புகார் செய்த சத்யா, கணவர் ரமேஷ் மருமகள் பூமதி(24) ஆகியோரையும், அதே சித்தூர் காவல்துறையினர் இரவோடு, இரவாக கடத்திச் சென்று கூடகலப்பட்டு கிரைம் காவல் நிலையத்தில் அனைவரையும் 5 நாட்களாக அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

பின்னர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், குறவன் பழங்குடியின சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், வழக்கறிஞர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊத்தங்கரை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவர்களை மீட்க வலியுறுத்தினர்.

அதன் அடிப்படையில் அழைத்துச் சென்ற, மொத்த 10 பேர்களில் மூன்று பெண்கள், ஒரு சிறுவன், ரமேஷ் உள்ளிட்ட 8 பேரை மட்டும் சித்தூர் காவல்துறையினர், கிருஷ்ணகிரி மத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஐயப்பன் மற்றும் பூமதி ஆகியோரை விடுவிக்கவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அருணா, சத்யா, கண்ணம்மாள், ரேணுகா ஆகியோர், சித்தூர் காவல்நிலைய காவலர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள் என்றும், அவர்களுடைய உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி சித்தரவதை செய்தார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அழைத்து செல்லப்பட்ட அனைவரின் முகங்களை பிளாஸ்டிக் கவர்களால் மூடி, பிளாஸ்டிக் பைப்பால், காவல்துறையினர் மாறி மாறி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அப்பெண்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மனித உரிமைக்கு முற்றிலும் விரோதமாக, சட்ட விரோதமாக இரவு நேரங்களில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த குறவர் இன மக்களை வேண்டும் என்றே, பொய்யாக திருட்டு வழக்கு போடும் நோக்கில், ஆந்திர சித்தூர் காவல்துறையினர் கடத்திச் சென்றுள்ளனர். சிறிதும் கூட மனித நேயமின்றி, பெண்கள், குழந்தை என பாராமல், அத்துமீறி நடந்துக் கொண்ட சித்தூர் காவல்துறையை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, குற்றச்செயலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம், சித்தூர் காவலர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு, சித்தரவதைக்குள்ளாக்குதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய தண்டனை பெற்று தருவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக, ஆந்திர மாநில அரசிடம் உடனடியாக தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், பாலியல் வல்லுறவுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி, உடலாலும், உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறவர் இன பெண்களுக்கு, தலா ரூ. 25 லட்சம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இனி எதிர் வரும் காலங்களில், தமிழ்நாட்டிற்குள் அத்துமீறி, சட்ட விரோதமாக புகுந்து ஆந்திர காவல்துறை கைது செய்யுமானால், தமிழர்களால் அடித்து விரட்டப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது. தமிழ்நாடு அரசும் உரிய கவனம் செலுத்தி, இதுபோன்ற செயல்கள் எதிர் வரும் காலங்களில் நடக்காத படி, பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்", என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Thirumavalavan Velmurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment