ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகே நேற்று அதிகாலையில் கரையை கடந்தது. இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. கனமழை, நிலச்சரிவு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக பெரும்பாலான ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்- ஜெய்ப்பூருக்கு நேற்று மாலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12967), தாம்பரம்- ஹைதராபாத்துக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்- புதுடெல்லிக்கு நேற்று மாலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய கிரான்ட் டிரங்க் விரைவு ரயில் (12615), சென்னை சென்ட்ரல்- புது டெல்லிக்கு நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய தமிழ்நாடு விரைவு ரயில் (12621) உட்பட 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத்துக்கு நேற்று காலை 10.10 மணிக்கு புறப்பட்ட ரயில், தெனாலி – செகந்திராபாத் – அகோலா வழியாக திருப்பிவிடப்பட்டது. தாம்பரம்- ஹைதராபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட சார்மினார் விரைவு ரயிலும் திருப்பி விடப்பட்டது.
சென்னை சென்ட்ரல் – சாப்ராவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விரைவு ரயில் மாற்றுபாதையில் இயக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல்- புதுடெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு இன்று (செப்.2) காலை 6.35 மணிக்கு புறப்படும் துரந்தோ விரைவு ரயில் (12269), சென்னை சென்ட்ரல் – அகமதாபாத்துக்கு இன்று காலை 10.10 மணிக்கு புறப்படும் நவஜீவன் விரைவு ரயில் (12656), சென்னை சென்ட்ரல் – பிலாஸ்பூருக்கு இன்று பிற்பகல் 3.40 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (12652) உட்பட 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“