ஆந்திரப் பிரதேச மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள புக்கப்பட்டினம் அலுவலகத்தில் சார்-பதிவாளராக சீனிவாச நாயக் என்பவர் இருந்து வந்தார். இவர் நிலம் பதிவு செய்ய வந்த விவசாயி ஒருவரிடம்
லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், அனந்தபூர் டி.எஸ்.பி வெங்கடாத்ரி தலைமையிலான ஏ.சி.பி குழுவினர் கடந்த வியாழக்கிழமை புக்கப்பட்டினம் அலுவலகம் சென்றனர்.
காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் விவசாயி ரூ.10,000 லஞ்சம் கொடுத்த போது அதை வாங்கி சார்-பதிவாளர் மற்றும் ஊழியர்களை ஏ.சி.பி குழு கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்நிலையில், அன்று இரவே சார்-பதிவாளர் ஏ.சி.பி காவலில் இருந்து தப்பி ஓடியுள்ளார். சார்-பதிவாளர் காவலில் இருந்து தப்பியோடியது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை வந்த அதிகாரி, லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கிய நிலையில் நேற்று (நவ.25) இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார். லாட்ஜ் ஊழியர்களின் தகவலில் பேரில் விரைந்து வந்த சென்னை போலீசார், இறந்தவர் சீனிவாச நாயக் என அடையாளம் கண்டனர். இதையடுத்து புக்கப்பட்டினம் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்ததாக சென்னை போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“