மதுரை கலெக்டர் நாகராஜன், கடந்த திங்கட்கிழமை ( ஜூன் 3ம் தேதி) இரவில், தகுதியான 1500 நபர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணியுத்தரவை வழங்கி அதிரடி காட்டியுள்ளார். துரதிஷ்டவசமாக, தமிழக அரசு, செவ்வாய்க்கிழமை ( ஜூன் 4ம் தேதி), கலெக்டர் நாகராஜனை, வேறொரு துறையின் இயக்குனராக மாற்றி நியமித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள , 1500 அங்கன்வாடி பணியாளர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு, கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது. ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையிலும், அவர்களுக்கு பணியுத்தரவு வழங்கப்படாமல் இருந்தது. தேர்வில் கலந்துகொண்டவர்களும் பணிவேண்டி கலெக்டர் அலுவலகத்திற்கு நடையோ நடை என்று நடந்துகொாண்டிருந்தனர். பலமுறை, அவர்கள் கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர். ஆனால், அவர்களது கோரிக்கை தான் நிறைவேறாமலேயே இருந்தது. இந்நிலையில், மதுரை கலெக்டராக நாகராஜன் நியமிக்கப்பட்டார். அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும், அவர்களுக்கு பணியுத்தரவு வழங்காதது உள்ளிட்ட நிர்வாகத்தின் குறைபாடுகளை கண்டறிந்தார். அதற்கான காரணங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதற்கு அதிகாரிகள் அளித்த ஒரே பதில், அரசியல் தலையீடு என்பதே. இந்த பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமிக்க அதிகளவில் லஞ்சம் கேட்கப்படுவதாகவும் அவருக்கு தகவல் வந்தது.
விதவைகள், ஆதரவற்றவர்கள், நேர்மையான முறையில் இப்பணிக்கு விண்ணப்பித்தோர் என அங்கன்வாடி பணியிடங்களுக்கு தேர்வானவர்களை கண்டறிந்து அவர்களது பணியுத்தரவில், கலெக்டர் நாகராஜன் கையெழுத்திட்டார். உடனடியாக பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் அத்துறைகளின் ஊழியர்களின் உதவியுடன் 1500 பேருக்கும் பணியுத்தரவை, திங்கட்கிழமை இரவு 9 மணி முதல் அவர்கள் வீட்டிற்கே சென்று பணியுத்தரவு வழங்கப்பட்டது.
பணியுத்தரவை பெற்ற சந்திரலேகா ( வயது 35) கூறியதாவது, எனக்கு கணவர் இல்லை. குழந்தையுடன் தினம் தினம் நாளை மிகவும் கடினமாக கடத்திவருகிறேன். இந்நிலையில், அங்கன்வாடி பணியாளர் தேர்வில் கலந்துகொண்டேன். இரண்டாண்டுகள் கடந்தும் பணி குறித்த எந்த அறிவிப்புமில்லை. 2 லட்சம் லஞ்சம் குடுத்தால், உடனடியாக அப்பணி வாங்கித்தரப்படும் என்று சிலர் என்னை அணுகினர். கடவுள், எனக்கு இப்பணியை வழங்கவேண்டும் என்று இருந்தால், நான் பெற்றுக்கொள்கிறேன் என்பதில் உறுதியாக இருந்தேன். எனது பிரார்த்தனை வீண்போகவில்லை. எனக்கு அந்த பணியுத்தரவு வந்துள்ளது. இதற்கு காரணமான கலெக்டர் நாகராஜனுக்கு, அவர் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
2,200 அங்கன்வாடிகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் சிரமப்பட்டு வருகிறோம். ஒருவரே, ஆறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளை கவனித்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது. இதுதொடர்பாக, ஏப்ரல் முதல்வாரத்தில் கலெக்டர் நாகராஜனிடம் மனு அளித்தோம். 1500 பணியிடங்களை நிரப்பி உத்தரவிட்டுள்ளதற்கு நன்றி. பணியுத்தரவு பெற்றவர்கள் மறுநாளே பணியில் சேர்க்கப்பட்டனர். சிலருக்கு அதில் இடையூறு இருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் பரஞ்ஜோதி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.