/indian-express-tamil/media/media_files/2025/05/02/3DUdQ3WNyKiK4zSo5igV.jpg)
Geetha jeevan warns
அரசு கோடை விடுமுறை வழங்கிய பிறகும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது என்றும், குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்கக் கோரி எந்தவித முன்னறிவிப்புமின்றி மே 2 முதல் அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், பல இடங்களில் குழந்தைகள் மையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மதிய உணவு, முட்டை, சத்துமாவு போன்ற ஊட்டச்சத்துகள் வழங்கப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. இது பயனாளிக் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும்.
மே 2ஆம் தேதி மூடப்பட்ட குழந்தைகள் மையங்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்யவும், இத்தகைய முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையங்களுக்கு மே 11 முதல் 25 வரை 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை வழங்கிய பின்னரும் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமாகும்.
உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, ஒரு வருடத்திற்கு 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட வேண்டும். தேசிய விடுமுறைகள், பண்டிகை விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து, 300 நாட்கள் உணவு வழங்குவது உறுதி செய்யப்பட்டு வந்தது.
இருப்பினும், அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று, 2022 முதல் மே மாதத்தில் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, விடுமுறை நாட்களுக்கான சத்துமாவும் முன்கூட்டியே குழந்தைகளுக்கு வழங்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது வழங்கப்படும் சத்துமாவு, குழந்தைகள் வீட்டிற்கு எடுத்துச் சென்று உண்ணும் வகையிலேயே வழங்கப்படுகிறது.
பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகளான பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே, தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டு குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.