திருவள்ளூர்: விலங்குநல ஆர்வலர் சாய் விக்னேஷ் தனது கால்நடை பாதுகாப்பு இல்லத்தில், பசுமாடுகளுக்கு என புதிய பிரிவைத் தொடங்கியுள்ளார். கடந்த ஜூலை மாதம் விக்னேஷ் தொடங்கிய கூட்டு நிதி திட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட ரூ. 7 லட்சம் நிதியில் இருந்து இந்த கால்நடை இல்லம் கட்டப்பட்டுள்ளது.
இதில் அவரால் மீட்கப்பட்ட 30 பசுக்கள் உள்பட 74 எருமை மாடுகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் இம்மாத தொடக்கத்தில் இந்த கால்நடை இல்லத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸ் பாஸ்கரன், தனுவாஸ் மருத்துவமனை குழு உறுப்பினர் ஸ்ருதி வினோத் ராஜ் மற்றும் முதன்மை நன்கொடையாளர்களான கவிஞர் தாமரை மற்றும் சுவாதி வில்லவலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து செந்தாமரை கூறுகையில் இந்த இளவயதில், விலங்குகளை மீட்டெடுக்க சாய் விக்னேஷ் செய்யும் பணி மிகவும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது. அவரது பணியைத் தொடர என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அவருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
சாய், பல ஆண்டுகளாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கும், இவற்றில் இருந்து மீட்கப்பட்ட கால்நடைகளை தனது பாதுகாப்பு இல்லத்துக்கு கொண்டு செல்வதற்கும் முக்கியப் பங்காற்றியுள்ளார். கால்நடைகளை மழையிலிருந்து பாதுகாக்கும் நேரத்தில் கொட்டகை திறக்கப்பட்டதாக ஆர்வலர் சாய் விக்னேஷ் கூறினார்.
21 வயதான சாய் விக்னேஷ், தனது 15 வயதில் சென்னை வெள்ளத்தின் போது விலங்குகளை மீட்கத் தொடங்கினார். 2017-ம் ஆண்டு தன்னார்வலர்களைக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடும் ’ஆல்மைட்டி அனிமல் கேர் ட்ரஸ்ட்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்.
அதன் அடுத்தக்கட்ட முயற்சியாக 2019 இல் விலங்குகள் காப்பகத்தை அமைத்தார். இதில் பூனை, பறவைகள், தெருநாய்கள், பசுமாடுகள், எருமைகள் என அவர் மீட்டெடுத்த விலங்குகள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இளவயதில் கைவிடப்பட்ட விலங்குகளை மீட்டெடுக்கும் அவரது முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil