அனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் மாணவி அனிதாவின் தந்தை மனுவிற்கு தயாரிப்பாளர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
அனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு எதிராக அனிதாவின் தந்தை புகார்
அவரது வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் டாக்டர் அனிதா எம் பி பி எஸ் என்ற பெயரில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அஜய்குமார் திரைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தில் அனிதாவாக பிக் பாஸ் ஜூலி நடிக்கிறார்.
இந்த படத்திற்கு தடை விதிக்க கோரியும், 25 லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க கோரியும், அனிதாவின் தந்தை சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்த போது, அனிதாவின் தியாகத்தையும், போராட்டத்தையும் வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் இத்திரைப்படம் தாயரிப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் படத்தின் இயக்குனர் குழுமூர் கிராமத்திற்கு சென்றதில்லை எனவும், அனிதாவைப் பற்றிய எந்த குறிப்பும் அவரிடம் இல்லை எனவும் வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு வரும் 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்க படத்தின் இயக்குனர் அஜய்குமாருக்கு உத்தரவிட்டார்.