scorecardresearch

திருச்செந்தூர் கோவிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்: தலைவர் பதவிக்கு அனிதா- அருள் போட்டி?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர் பதவிக்கு தினகரன் நாளிதழ் நிறுவனர் மறைந்த கே.பி. கந்தசாமியின் மருமகள், அனிதா குமரனுக்கும் மற்றொரு அறங்காவலர் உறுப்பினரான அருள் முருகனுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

திருச்செந்தூர் கோவிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்: தலைவர் பதவிக்கு அனிதா- அருள் போட்டி?

தினகரன் நாளிதழ் நிறுவனரும் மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி. கந்தசாமியின் மருமளும் முன்னாள் எம்.பி குமரனின் மனைவி அனிதா குமரன் உள்பட 5 பேரை அறங்காவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், அனிதா குமரனுக்கும் மற்றொரு அறங்காவலர் குழு உறுப்பினரான அருள் முருகனுக்கும் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு போட்டி நிலவுகிறது.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் வழிபடப்படுகிறது.

திருச்செந்தூர் கோயிலில் முருகப் பெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். திருச்செந்தூர் முருகப் பெருமான் செந்தில்நாதர் என்றும் செந்தில் ஆண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இத்தகைய பிரசித்திபெற்ற திருச்செந்தூர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு, தினகரன் நாளிதழ் நிறுவனரும் முன்னாள் இந்து அறநிலையத்துரை அமைச்சரும் மறைந்த கே.பி. கந்தசாமியின் மருமகள் அனிதா குமரன் உட்பட 5 பேரை அறங்காவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள்து.

இதுகுறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: “இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்கு உட்பட்ட சட்டப்பிரிவு 46 (III)-ன் கீழ் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய உரிய பெயர்ப்பட்டியல் தயாரித்து அரசுக்கு அளிக்க, 7 உறுப்பினர்களை கொண்ட மாநில குழு ஒன்று அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

அதன்படி மாநில குழு அளித்த பரிந்துரையை அரசு பரிசீலித்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக, தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி, இந்திராநகரைச் சேர்ந்த வி.செந்தில் முருகன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மானாடு தண்டுபத்து, மேற்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. யான கே.பி.கே.குமரன் மனைவி அனிதா குமரன், தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் கீழமுத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ந.ராமதாஸ், சென்னை சாந்தோம், சல்லிவன் தெருவைச் சேர்ந்த இரா. அருள் முருகன், தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த பா.கணேசன் ஆகிய 5 பேரை நியமித்துள்ளது. இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டும். நியமனம் செய்யப்படும் அறங்காவலர்கள், அறங்காவலர் குழுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நாளிலிருந்து 2 ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள். மேற்கண்டவாறு இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அனிதா குமரன், தினகரன் நாளிதழ் நிறுவனரும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான (மறைந்த) கே.பி கந்தசாமியின் மருமகள் ஆவார். அனிதாவின் கணவர் குமரன், தி.மு.க சார்பில் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தவர். இவர்களது சொந்த ஊர் திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட தண்டு பத்து. திருச்செந்தூர் எம்.பி கனிமொழி முயற்சியால் அனிதா குமரன் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி அறங்காவலர்கள் குழு தலைவர் பதவிக்கு அறங்காவலர்கள் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. கே.பி.கே. குமரன் மனைவி அனிதா குமரனுக்கும் மற்றொரு அறங்காவலர் உறுப்பினரான அருள் முருகனுக்கும் இடையே போட்டி நிலவுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு அறங்காவலர் குழு உறுப்பினரான அருள் முருகன், ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் நடத்தி வருபவர். இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே முதலூர் கிராமத்தை அடுத்த அடையல். அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு இவரது பெயரும் திமுக வி.ஐ.பி-களால் பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே தலைவர் அனிதா குமரனா? அருள் முருகனா? என்பது சில நாட்களில் தெரியக்கூடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Anitha kumaran vs arul murugan for tiruchendur subramania swami temple trustees chairman

Best of Express