சின்னத்திரை பிரபலம் அனிதா சம்பத் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், கொழுமணிவாக்கம் ஊராட்சிக்குச் சென்ற போது எடுத்த ஒரு வீடியோவை அனிதா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
அந்த வீடியோவில் பேசிய அனிதா, ’நான் மாங்காடு பக்கத்துல இருக்கிற கொழுமணிவாக்கம் என்ற இடத்துல இருக்கேன். இங்க ஒரு போர்டுல கொழுமணிவாக்கம் ஊராட்சி, திருக்குளத்திற்கு நடைபாதை, படிக்கட்டு மேம்பாட்டுப் பணி, மதிப்பீடு ரூ.11.36 லட்சம் போட்டுருக்காங்க..
இந்த படிக்கட்டை பாருங்க... இதைப் போட 11 லட்சம் ரூபாய் ஆகுமா? இந்த பணத்துல வீடே கட்டுறாங்க.. நானும் சுத்தி எதாவது கட்டியிருப்பாங்கன்னு தேடிப் பார்த்தேன்... ஆனா எங்கேயும் எதுவும் கிடையாது... இந்த ஒரு படிக்கட்டுக்கு எதுக்கு இவ்வளவு பணம்’ என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோவை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அதை தன் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து அனிதா சம்பத் நீக்கிவிட்டார். ஆனாலும் அந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில் அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோவுக்கு, தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு பதிலளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தகவல் சரிபார்க்கும் குழு தனது X பக்கத்தில் வெளியிட்ட தகவலின்படி, ‘காஞ்சிபுரம் மாவட்டம், கொழுமணிவாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022 -2023 ஆம் ஆண்டில் திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டு மட்டுமின்றி, நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழி, மின் விளக்குகள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது.
படித்துறை அமைத்தலுக்கு ரூ.1.70 லட்சம், நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழிக்கு ரூ.66 ஆயிரம், நடைபாதை அமைத்த பேவர் பிளாக் வகைக்கு ரூ.6.17 லட்சம், நடைபாதையைச் சுற்றி மின் விளக்கு அமைத்தல் செலவு ரூ.96ஆயிரம், மேசைகள் ரூ.12 ஆயிரம், இதற்கான ஜிஎஸ்டி ரூ.1.73 லட்சம் என மொத்தம் ரூ.11.36 லட்சம் செலவானது. எனவே வதந்தியை பரப்பாதீர்கள், எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“