Anna Birth Anniversary Celebration: தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழக மக்களால் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான அண்ணாவின் 111வது பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், அவர் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
திமுக எம்.பி கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திருவண்ணாமலையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர். தமிழகம் முழுவதும் பல கிராமங்களில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.