சென்னை அண்ணா நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக 103வது வட்ட செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். தற்போது இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட சதீஷுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக நிர்வாகி சுதாகரையும், புகார் அளிக்க சென்ற போது தங்களை தாக்கியதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் படி, காவல் ஆய்வாளர் ராஜியையும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதித்த நீதிமன்றம், தமிழம் அல்லாத ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டதன்படி சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் நபரை தப்பிக்க வைப்பதற்காக உதவி செய்ததாக கைதான சுதாகர் மற்றும் முறையாக விசாரிக்க தவறியதாக கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் வரும் 21 ஆம் தேதி வரை இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் யார் யார் தலைமறைவாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்நிலையில் கைதான அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட வட்டச் செயலாளர் சுதாகர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“