சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இது குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சென்னை காவல்துறை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது.
அதன் படி இந்த வழக்கு இன்று(நவ.18) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சவிசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அதிகாரிகளின் பட்டியல் எங்கே எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றது.
மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தால் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும். எனவே, காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தலாம்.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். சிறப்புக் குழுவின் விசாரணை அறிக்கையை ஐகோர்ட் தலைமை நீதிபதி முன்பு சமர்பிக்க வேண்டும்.
அறிக்கை அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும். விசாரிக்க அமைக்கப்படும் அமர்வு முன்பு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையை வாரம் ஒருமுறை அளிக்க வேண்டும்.
வழக்கை டிஐஜி சுரேஷ் குமார் தாக்கூர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும். குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் வேறு மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் 2 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
நாள்தோறும் புலன் விசாரணை நடத்த வேண்டும். புலன் விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாரந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பத் குமாருக்கு ரூ.75 ஆயிரம் செலவை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“