சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் மாநில போலீசார் சிறுமியை நடத்திய விதம் குறித்தும் கண்டனம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இது குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வரப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி தாக்குவதாக சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டனர்.
இதன் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தொடர்ந்து வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை காவல்துறை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு நேற்று (நவ.11) உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முகாந்திரத்தில் போலீசார் வழக்கை தவறாக கையாண்டுள்ளது தெரிகிறது. இந்த விசாரணையில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை.
அதே நேரம் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. தமிழக காவல் துறையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்யப்பட வேண்டும். அதற்கு தமிழகத்தில் பணிபுரியும் வேறு மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியலையும், அந்த அதிகாரிகள் பற்றிய சுருக்கமான விவரங்களுடன் அடுத்த விசாரணையான நவ.18-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பட்டியலில் குறைந்தது 3 பெண் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“