After 7 Years Anna Salai became Two-way again: சென்னையில் உள்ள அண்ணாசாலை கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழிப்பதையாக மாற்றப்பட்டு வாகனப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த இருவழிப்பாதை வாகனப்போக்குவரத்து சோதனை முறையில் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றாகவும் மட்டுமில்லாமல் சென்னையின் அடையாளங்களில் ஒன்று அண்ணாசாலை. அத்தகைய பெருமை மிகு அண்ணாசாலை கடந்த 2012 ஆம் ஆண்டு கிண்டி முதல் சென்ட்ரல் வரை பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக ஜெனரல் பேட்டர்ஸ் சாலை முதல் ஆனந்த் தியேட்டர் வரை வாகனங்கள் செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
மெட்ரொ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பின்னரும்கூட அண்ணாசாலை ஒருவழிப்பாதையாகவே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் சென்னை போக்குவரத்து போலீசார் பூஜை செய்து அண்ணாசாலையை இருவழிப்பாதையாக்கி வாகனப்போக்குவரத்து அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாசாலையில் இருவழிப்பாதை வாகன போக்குவரத்து சோதனை ஓட்டம் புதன் மற்றும் வியாழக்கிழமை இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
அதன்படி, சில போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டன. அண்ணா சாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெலிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. தற்போது ஜெனரல பேட்டர்ஸ் சாலையில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. மாறாக, வெலிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை வாகனங்கள் செல்லத் தடை செய்யப்படுள்ளது.
அதே போல, ராயப்பேட்டையில் மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் சாலையில் அனுமதிக்கப்படுகிறது. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லலாம்.
தற்போது அண்ணாசாலையில் இருவழிப்பாதை வாகனபோக்குவரத்தை சோதனை ஒட்டத்தை அனுமதித்துள்ள போக்குவரத்து காவல்துறை சாலையை சீரமைத்தபின் ஒருவாரம் அல்லது 10 நாட்களில் இந்த ஏற்பாடு நிரந்தரமாக்கப்படும் என்று தெரிவித்தனர்.