சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கில் மாணவி அளித்த புகாரின் எப்.ஐ.ஆர் வெளியானது, காவல்துறை, அமைச்சர் முரண்பட்ட கருத்து என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க அரசைக் கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் எதிர்க்கட்சிகள் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க என அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில், இன்று (ஜன.2) பா.ம.க போராட்டம் நடத்துவதாக அறிவித்தது.
பாமக மகளிரணி சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என பா.ம.க தலைமை தகவல் வெளியிட்டது.
இதையடுத்து வள்ளுவர் கோட்டத்தில் தொண்டர்கள் குவிந்தனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருத்தனர். போராட்டம் நடைபெற்றால் கைது நடவடிக்கைக்காக பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதன் பின் போராட்டம் நடத்த வள்ளுவர் கோட்டத்திற்கு காரில் சவுமியா அன்புமணி வருகை தந்தார். அவரை சுற்றி வளைத்த போலீசார் போராட்டம் நடத்த விடாமல் கைது செய்து பேருந்து ஏற்றி அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.