சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று முதல் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று விசாரணையின் போது நீதிபதிகள் அரசு மற்றும் காவல்துறையை கடுமையாக விமர்சனம் செய்து கேள்வி எழுப்பினர். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குற்றத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை, ஒருவரை கைது செய்ததற்காக பாராட்ட வேண்டும் என எப்படி சொல்ல முடியும்? பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் காவல் ஆணையர் அரசு அனுமதியை பெற்றாரா? எனக் நீதிபதிகள் நேற்று சரமாரி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இன்று (டிச.28) இன்றும் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது, அரசு அதிகாரிகள் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும். மாறாக பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக் கூடாது. ஊடகங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஊடகங்கள் எதிரிகள் அல்ல என்று கூறினர்.
அண்ணா பல்கலை தரப்பில், ஊடகங்களுக்கு எதிராக கூறவில்லை. விசாரணை குறித்து தவறான தகவல்களை ஊடகங்களிடம் கூறுவதை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.