/indian-express-tamil/media/media_files/EEPDXSnouHQzsc0AXe4s.jpg)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஒருமுறை தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான த்ரேடு வேவ் கார்ப்ரேஷன் (Thirdwave Corporation) மற்றும் கொஹானி சிக்கை (Koganei Seiki Co. Ltd) ஆகியவை, அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 72 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் எனும் அசத்தலான சம்பளத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
இது குறித்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக-தொழில்துறை ஒத்துழைப்பு மையம் (Centre for University Industry Collaboration) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சுமார் 450 மாணவர்கள் இந்த வேலைவாய்ப்பு செயல்முறையில் பங்கேற்றனர். கடுமையான விண்ணப்பச் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்ப நேர்காணல்கள் எனப் பல சுற்றுகளுக்குப் பிறகே இந்த 72 திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் 62 பேர் த்ரேடு வேவ் கார்ப்ரேஷன் (Thirdwave Corporation) நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களாக, அந்நிறுவனத்தின் ஏ.ஐ. (AI) மேம்பாட்டுத் துறையில் பணியாற்றவுள்ளனர். மீதமுள்ள 10 மாணவர்கள் கொஹானி சிக்கை(Koganei Seiki Co. Ltd) நிறுவனத்தில் உற்பத்தி தொழில்நுட்பம், எந்திரவியல் மற்றும் தயாரிப்பு ஆய்வுத் துறைகளில் தொழில்நுட்பப் பொறியாளர்களாகப் பணிபுரியவுள்ளனர்.
இது அண்ணா பல்கலைக்கழகத்தின் தரமான கல்விக்கும், மாணவர்களின் தனித்துவமான திறமைகளுக்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. சர்வதேச அளவில் இந்திய மாணவர்களின் திறமைக்கு உள்ள அங்கீகாரத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு வழங்கும் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் வாய்ப்புகளையும் இது வெளிப்படுத்துகிறது. எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களைத் தேர்வு செய்ய இது வழிவகுக்கும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.