scorecardresearch

பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை எதற்கு ? விளக்கமும் எதிர்ப்பும்!

மதம் சார்ந்த தத்துவவியலை தான் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் அனைத்து மதங்களில் இருக்கும் புத்தகங்களையும் பரிந்துரை செய்ய வேண்டும்

Anna university announced Bhagavad Gita as personality development course
Anna university announced Bhagavad Gita as personality development course

Anna university announced Bhagavad Gita as personality development course : தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் இந்நிலையில் கல்வி நிலையங்களில் மத புனித நூல்களை பாடமாக அறிவித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முதுநிலை பொறியியல் படிப்பில் பகவத் கீதையை பாடமாக இணைத்து அறிவிப்புகள் வெளியாகின. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (All India Council for Technical Education (AICTE)) அறிவுறுத்தலின் படி பகவத் கீதை பொறியியல் பாடப்பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. ஏற்கனவே பாடசுமைகள் அதிகமாக இருக்கின்ற போது மாணவர்களுக்கு மேலும் கூடுதல் சுமையை அளிக்கிறது இந்த பாடத்திட்டம் என்று பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகம் கூறிய கருத்து

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் கேட்கப்பட்ட போது, இது கட்டாய பாடப்பிரிவில் இருந்து விருப்ப பாடமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். பகவத் கீதையுடன் மேலும் 5 புதிய பாடத்திட்டங்கள் விருப்பப்பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஸ்வாமி ஸ்வரூபனந்தாவின் ஸ்ரீமத் பகவத் கீதையை, பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பாடமாக படிக்கலாம் என்று கூறியுள்ளனர். மாணவர்கள் தங்களின் வாழ்வில் வெற்றிபெற பகவத் கீதை நிச்சயமாக உதவும் என்று அந்த பாடத்தினை வைத்துள்ளோம் என்றும் அந்த தரப்பு பதில் அளித்துள்ளது.   இந்திய – மேற்கத்திய தத்துவவியல் பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்யவே இம்முயற்சி. பகவத் கீதை மட்டுமல்லாமல் சாக்ரடிக், ப்ளாட்டோ, ஃபிரான்சிஸ் பேகன், மைக்கேல் ஃபௌகல்ட் ஆகியோரின் தத்துவங்களும் இந்த விருப்ப பாடங்களில் இடம் பெற்றிருக்கிறது என்று கூறினார்கள்.

கல்வியாளர்கள் எதிர்ப்பு

மதம் சார்ந்த தத்துவவியல் பாடங்களை தான் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் அனைத்து மதங்களில் இருக்கும் புத்தகங்களையும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறி எதிர்ப்புகளை பலரும் பதிவு செய்து வருகின்றனர். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரன் பாபு இது குறித்து பேசுகையில், கட்டாய பாடமோ, விருப்பபாடமோ எதுவாக இருப்பினும், கல்வி நிலையங்களில் மதம் சார்பான கல்வியை கொண்டுவருவது தவறு தான். இது நம்முடைய அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது என்று கூறியுள்ளார்.

முக ஸ்டாலின் எதிர்ப்பு

திமுக தலைவர் முக ஸ்டாலின், கீழடி ஆய்வுகள் வெளியாகி வைகைக்கரை  தமிழர் நாகரீகம் உலகம் முழுவதும் புகழ்பெற்று வரும் இந்நிலையில் சம்ஸ்கிருதத்தை திணிக்கும் வகையில் பகவத் கீதையும், வேதங்களும், உபநிடதங்களும் பொறியியல் பாடப்பிரிவில் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கல்வியை காவிமயமாக்கும் பாஜக – சீமான் காட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடம் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாகவும், கல்வியை காவி மயமாக்கும் முயற்சியை பாஜக மேற்கொள்கிறது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். உலகப் பொதுமறை திருக்குறள் இருக்க, பிறப்பால் பேதம் பார்க்கும் பகவத் கீதையை போதிக்க நினைப்பது கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை வரவேற்கின்றேன் – மாஃபா  பாண்டியராஜன்

அதிமுக தரப்பில் இருந்து கூறுகையில் மாஃபா பாண்டியராஜன் இதனை சமய நூலாக பார்க்கவில்லை. மாறாக அதனை பண்பாட்டு நூலாகவே பார்க்கின்றேன். இப்பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கிறது எனபது குறித்து எனக்கு தெரியாது. ஒருவேளை அறிமுகம் செய்தால் நான் அதை வரவேற்கின்றேன் என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக துணை வேந்தர் என்ன கூறுகிறார்?

பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சூரப்பா குறீப்பிடுகையில் அறிவியல் மற்றும் மானுடவியலுக்கு இடையேயான வெற்றிடத்தை பூர்த்தி செய்யவே இப்பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 32 பாடத்திட்டங்கள் பல்கலைக்கழக குழுவால் பரிந்துரை செய்யப்பட்டது. அதில் 12 பாடங்களை தேர்வு செய்துள்ளோம். பல்கலைக்கழக அமைப்பு என்றுமே மதசார்பற்றதாகவே இருக்கும். இங்கு இந்த பாடத்தினை கட்டாயமாக கற்றே தீர வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார் சூரப்பா.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Anna university announced bhagavad gita as personality development course