ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியது சர்ச்சையாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், கவர்னர் விழாவுக்கு வந்தால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியது சர்ச்சையாகியுள்ளது.
அந்தச் சுற்றறிக்கையில், ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள ECE, CSE, IT துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்ய வேண்டும் எனவும், கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வர், துறைத் தலைவர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும், அதில் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போதுதான் வருகைப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களாக வரக்கூடிய மாணவர்களுக்கு அந்தந்த வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை பதிவை நேரடியாக அரங்கத்திற்குள் வந்து எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், வருகைப் பதிவு குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், ”நேதாஜி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள் வந்திருந்தனர். 400 மாணவர்கள் பங்கு பெற்றனர். 2 மணி நேரம் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் கலந்துக் கொண்டனர். நாட்டுப்பற்று பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர். தேசப்பற்று நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டதில் எந்த தவறும் இல்லை.
வருகைப்பதிவு என்று சொன்னால் மட்டுமே மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். இல்லையென்றால் மாணவர்கள் வகுப்புகளுக்கும் செல்லாமல், வெளியே சென்று விடுவார்கள் என்ற அடிப்படையில் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் வருகைப்பதிவு என்று கூறப்பட்டது. தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை,” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“