Coronavirus Tamil Nadu News: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) குறைந்தது 8 பேருக்கு புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னை ஐஐடி வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 191 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள 6 மாணவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வளாகத்தில் தங்கியிருக்கும் 2 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து இந்த நிறுவனம் சோதனைகளை நடத்த முடிவு செய்தது.
ஐ.ஐ.டி வளாகத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: “நாங்கள் இதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். முகக்கவசங்களை அணியாமல் இருப்பது வைரஸால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கும். சாப்பிடும்போதுதான் நாம் முகக்கவசங்களை அகற்ற வேண்டும். எனவே, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். சிலரின் சிறிய தவறுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். நான் நேற்று கூறியது போல, இவற்றைச் செயல்படுத்த முடியாத நிர்வாகத்தின் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறினார்.
மாணவர்களை பீதி அடைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “விடுதிகளுக்குள் உள்ள மாணவர்களுக்கு பார்சல் செய்யப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. நாங்கள் இன்று மாணவர்களுடன் உரையாடினோம். அவர்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டும். மேலும், கட்டுமானத் தளங்களில் பணிபுரியும் நபர்களை சோதனை செய்ய நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். நாங்கள் பேருந்து நிறுத்தங்களில் பிரச்சாரத்தைத் தொடங்கப் போகிறோம். பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை. திருமண மண்டபங்கள், இறுதி சடங்குகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசி நிச்சயமாக வரும். படிப்படியாக நோயைக் கட்டுப்படுத்துவோம்” என்று கூறினார்.
சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் அடையாறு மண்டல அதிகாரி திருமுருகன், தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் ஜெகதீசன் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை ஐஐடி-யில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் உள்ள பிற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அரசாங்கத்தை தூண்டியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 மாணவர்களும் அறிகுறியற்றவர்கள் என்று கிண்டி வளாகத்தின் பொறியியல் கல்லூரி டீன் எஸ்.இனியன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “500 மாதிரிகள் நேற்று எடுக்கப்பட்டன. மேலும் 200 மாதிரிகள் இன்று எடுக்கப்பட்டது. கோவிட் -19 தொற்று உறுதி செய்த மாணவர்களுக்கு எந்த அறிகுறிகளும் வெளிப்படவில்லை. அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மாணவர்கள் வகுப்பறையில் இருக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவர்கள் ஆன்லைனில் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால், அவர்கள் அதைச் செய்யலாம். நாங்கள் எந்த வருகைப் பதிவையும் எடுக்கவில்லை. அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil