பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல், பகவத் கீதை பாடம் சர்ச்சை; அண்ணா பல்கலை துணை வேந்தர் விளக்கம்

Anna University Curriculum controversy on Bhagavad Gita: அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 3-வது செமஸ்டரில் முக்கிய பாடங்களுடன் சேர்த்து தத்துவவியல், பகவத்கீதை...

Anna University Curriculum controversy on Bhagavad Gita: அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 3-வது செமஸ்டரில் முக்கிய பாடங்களுடன் சேர்த்து தத்துவவியல், பகவத்கீதை உள்ளிட்ட பாடமும் படிக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை பலரும் விமர்சித்ததால் சர்ச்சையானது. அதனால், இதற்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளிக்கும் விதமாக அவற்றை விருப்ப பாடமாக மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும வழிகாட்டுதலின் படி அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT, CEG, ACT, SAP வளாகங்களில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதலே தத்துவவியல் பாடம் கற்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளில் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இனி, பொறியியல் மாணவர்களுக்கு 3-வது செமஸ்டரில் முக்கிய பாடங்களுடன் சேர்த்து தத்துவவியல் பாடமும் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 கிரெடிட்டுகள் கொண்ட இந்த கட்டாயப் பாடத்தில் இந்து மத நூல்களாக கருதப்படும் வேதங்கள் மற்றும் பகவத் கீதை குறிப்பு நூல்களாக இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், அதில் இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களை மாணவர்கள் ஒப்பிட்டு புரிந்துகொள்ளும் விதமாக இந்த பாடம் இருக்கும் என்றும் இது திறனாய்வையும் கற்பனை வளத்தையும் பெருக்குவதோடு இலக்கியம், மானுடவியல் ஆகியவற்றுடன் அறிவியலுக்கு உள்ள தொடர்பை மாணவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இந்த பாடம் கற்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் இதன் மூலம் சுயத்தை அறிவதுடன் பிறர் சுயத்தையும் அறிந்துகொள்ள இந்த பாடம் உதவும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த பண்பாட்டு ஆதிக்கப்பாடத்தை ஆளுநரும் உயக்கல்வித்துறையும் மாற்றிட வேண்டும் வலியுறுத்தினர். அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  கண்டனம் தெரிவித்தனர். இது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று குற்றம்சாட்டினர். மேலும், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு எதற்கு பகவத் கீதையும், வேதமும், உடநிடதமும் என்று சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு குறித்து துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அதில், “தத்துவவியல், பகவத் கீதை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் விருப்ப பாடமாக வழங்கப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம்.” என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close