பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலை மூலமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், வழக்கறிஞர் பொன்.பாண்டியன், முரளி உள்ளிட்டோர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விடுமுறைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப கட்டணத்தை வரைவோலை மூலமாகவும் மாணவர்களிடம் பெற வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் குலுவாடி ஜி ரமேஷ், தண்டபாணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் பொறியியல் படிப்பிற்கு இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும்,12310 பேர் 42 உதவி மையங்கள் மூலமாக பதிவு செய்திருப்பதாகவும், ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் தங்களது சொந்த இணையதள வசதி மூலமாகவும் , 270 பேர் வரை மூலமாக கட்டணங்களைச் செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கலந்தாய்விற்கான கட்டணத்தையும் வரைவோலை மூலமாக பெற்று கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு போது செலுத்த வேண்டிய கட்டணத்தை வரைவோலை மூலமாகவும் அண்ணா பல்கலைக்கழகம் பெற வேண்டும் என உத்தரவிட்டனர். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 42 உதவி மையங்களும் கலந்தாய்வு முடியும் வரை செயல்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவாதத்தையும் ஏற்று கொள்வதாகவும். மேலும், ஏற்கனவே இந்த வழக்கில் டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.