அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பட்டாளர் உமா உள்ளிட்ட மூன்று பேரின் முன் ஜாமீன் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்திய தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களின் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவும், அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பட்டாளர் உமா, தனியார் கல்லூரி உதவி பேராசிரியர்கள் அன்புசெல்வன், மகேஷ் பாபு உள்ளிட்ட 10 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது இதனையடுத்து இவர்கள் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறை வழக்கு பதிவு செய்தது.
இதை தொடர்ந்து, முன் ஜாமீன் கோரி உமா, மகேஸ்பாபு, அன்புச்செல்வன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், உமா மனுவில், கடந்த 2015 முதல் 2018 மார்ச் மாதம் வரை மட்டுமே தான் தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை முறையான விசாரணை நடத்தாமல் தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதே போல் அன்புச்செல்வன் தாக்கல் செய்த மனுவில் மறுமதிப்பீடு பணிகளில் தான் கலந்து கொள்ளாத நிலையில் தன் மீதும் பொய்யாக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளதாகவும், எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அப்போது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் புலன் விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் விசாரணை முடிவடையாத நிலையில் முன் ஜாமீன் வழங்கினால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும் என தெரிவித்தார்.
அப்போது நீதிபதி விசாரணை முடிவடையாத நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தார்.
இதனையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் திரும்ப பெருவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டது.
இதனையடுத்து வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்த நீதிபதி தண்டபாசி
மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.