/tamil-ie/media/media_files/uploads/2018/03/Anna-University-Entrance-Picture.jpg)
anna university result, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
Anna University exam scam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு வழக்கில் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக உமாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்திருந்தது. மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வில் கூடுதலாக மதிப்பெண் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யவும் ஒரு பாடத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்று தேர்ச்சி பெறச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் விகிதம், 4 பாடங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் என்பது கணக்கு. கடந்த தேர்வில் மட்டும் 3.04 லட்சம் மாணவர்கள் மறுகூட்டலுக்கு பதிவு செய்தனர். இதில் 90 ஆயிரம் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 73 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் உமா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். உமா தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் மண்டல ஒருங்கிணைப்பாளர்களான விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்தியவர்கள் 7 பேரும் அடங்குவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.