சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கி முதுகலை பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி, தனது முன்னாள் காதலனால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த 2021 முதல் 2024 வரை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் பயின்ற ராம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். அதன் பிறகு, ராம்குமார் அந்த மாணவி எடுத்திருந்த நெருக்கமான புகைப்படங்களைக் காட்டி, தொடர்ச்சியாக தன்னுடன் பேச வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம், ராம்குமார் திடீரென அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, மாணவியிடம் நடுரோட்டில் பேசச் சொல்லி, அவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ராம்குமார் எப்படி வளாகத்திற்குள் நுழைந்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் இது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ராம்குமாரின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் உள்ள நெருக்கமான புகைப்படங்களை அழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.